புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்..!


நாட்டின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ஓம் பிரகாஷ் ராவத்தின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் நாட்டின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாவிட்டாலும் அவருடைய பெயரை தேர்வு செய்து மத்திய அரசு குடியரசுத் தலைவரிடம் அனுப்பியிருப்பதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுனில் அரோராவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

அவர் வரும் டிசம்பர் 2-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்பார் என்றும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அவரே நடத்துவார் என்றும் சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பேற்றதில் இருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது ஆகும்வரை அந்தப் பதவியை அவர் வகிக்கலாம். பொதுவாக அதிக பணி மூப்பு பெற்ற தேர்தல் ஆணையரையே தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிப்பது மரபாக உள்ளது. தற்போது 62 வயதான சுனில் அரோரா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பணி மூப்பு அடிப்படையில் அவர் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post