எதில் கைவச்சாலும் விளங்குவதில்லை – அண்ணாமலை குறித்து கே.எஸ்.அழகிரி புலம்பல்…!

தமிழகத்தில் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எதிராக பா.ஜ.க. நடத்துகிற ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைப் பரப்புகிற முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுக்கால மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

பதவியேற்ற அன்றே கோப்புகளில் கையெழுத்திட்டுக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டினார். சட்டப்பேரவை தேர்தலின் போது கொடுத்த 505 வாக்குறுதிகளில் கடந்த 10 மாத காலத்தில் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

அவரது சாதனைகளைத் தமிழகமே பாராட்டி மகிழ்கிறது.நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் கல்லூரிகளை மேம்படுத்த பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடி திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் கல்லூரி கட்டிடங்கள் அதிகளவில் கட்டப்பட்டு தமிழகம் முழுவதும் கல்லூரிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று தமிழக அரசின் சார்பாக கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டு அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

முத்தமிழறிஞர் கலைஞரைப் போலவே தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் பெருந்தலைவர் காமராஜரின் புகழைப் போற்றுகிற வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பாராட்டி மகிழ்கிறேன்.

எனவே, தமிழகத்தில் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எதிராக பா.ஜ.க. நடத்துகிற ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைப் பரப்புகிற முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது. தொடர்ந்து நடைபெற்று வருகிற அனைத்துத் தேர்தல்களிலும் பிரதமர் மோடியையும், தமிழக பா.ஜ.க.வையும் மக்கள் நிராகரித்து வருவதைப் போல எதிர்காலத்திலும் நிராகரிக்கவே செய்வார்கள்.

எனவே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அரசியல், தமிழகத்தில் எந்த வகையிலும் எடுபடாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …