ஏப்ரல் 9ந் தேதி வெளியானத் திரைப்படத்தை தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. மேலும், தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத வசூல் முதல் நாளிலேயே கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஏப்ரல் 9-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து திரையரங்கில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது கர்ணன்.
100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி இருந்திருந்தால் இன்னும் அதிக வசூலைப் பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒருபக்கம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் மட்டுமல்லாது திரைபிரபலங்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டினார்கள். திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த போதே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த 26-ம் தேதி முதல் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
தமிழ்நாட்டில் 21 கோடிக்கு விற்கப்பட்ட கர்ணன் திரைப்படம் தற்போது வரை 42 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், அதுமட்டுமில்லாமல் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 6 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அமேசான் தளத்தில் கர்ணன் திரைப்படம் 8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்ணன் திரைப்படம் வெளியான முதல்நாள் மட்டும்தான் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி இருந்தது நிலையில், அடுத்த நாள் வெறும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு தனுஷ் படம் இவ்வளவு பெரிய வசூலை வாரி குவித்திருப்பது நாளுக்கு நாள் அவரது சினிமா மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறது.