எம்ஜிஆர் நடிக்க வந்தபோது அவரது ஜொலிக்கும் அழகை நேரில் பார்த்து, பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அசந்து போயினர். சிவாஜி கணேசன் நடிக்க வந்த போது குதிரை மூஞ்சி போன்று முகம் இருப்பதாக, சிலர் விமர்சித்தனர். ஆனால், நடிப்புக்கே இலக்கணமாக வாழ்ந்து யாரும் எட்ட முடியாத உச்சங்களை தொட்டார் செவாலியே சிவாஜி கணேசன்.
ரஜினிகாந்த், விஜயகாந்த் நடிக்க வந்தபோதும் கருப்பு நிறத்தை பார்த்து, கிண்டலடித்த பலரும் ஒரு கட்டத்தில் அவர்களது கால்ஷீட்டுக்காக அவர்கள் வீட்டு வாசல் தவம் கிடந்தனர். ஆரம்பத்தில் அவர்களுடன் நடிக்க மறுத்த சில நடிகைகள், பிறகு கெஞ்சாத குறையாத அவர்களுடன் நடிக்க பகீரத முயற்சி செய்தனர்.
இப்போது ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக 73வயதிலும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். கேப்டன் விஜயகாந்த், உடலால் மறைந்தும் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். ஒருவேளை பிற்காலத்தில் லெஜண்ட் சரவணன் கூட பெரிய நடிகராக வரக்கூடும். யாரும் எதிர்காலத்தை கணிக்க முடியாது.
ஆனால் அதே வேளையில் துவக்கத்தில் டிவி சேனல் விளம்பரங்களில் மட்டுமே வந்துக்கொண்டு இருந்த சரவணன், திடீரென லெஜண்ட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு புதுமுக ஹீரோவாகி விட்டார். அவர்தான் அவர் படத்தின் தயாரிப்பாளர். இப்போது துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்க அண்ணாச்சி தயாராகி வருகிறார்.
ஆனால், அவரது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் காலை முதல் இரவு வரை அங்குள்ள எல்இடி திரைகளில் எந்நேரமும் லெஜண்ட் படத்தின் பாடலே விஷூவலுடன் ஒலித்துக்கொண்டு இருப்பது, வாடிக்கையாளர்களை கிறுகிறுக்க வைக்கிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களால் சில மணி நேரம் கூட தாக்குபிடிக்க முடியாத போது, கடைக்குள் இருக்கும் ஊழியர்களின் நிலை, ரொம்ப பரிதாபம் அண்ணாச்சி. பாட்ட மாத்துங்க!