தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு எப்படி ஜோடியாக பிரபல நடிகைகள் இருக்கிறார்களோ அதுபோல், காமெடி நடிகர்களுக்கும் ஜோடியாக நடிகைகள் நடிப்பது எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.
நாகேஷ் நடித்த படங்களில் அவருக்கு ஜோடியாக மனோரமா நடித்திருப்பார். சில படங்களில் சச்சு நடித்திருப்பார். அதே போல் சுருளிராஜனுக்கும் சில படங்களில் காந்திமதி மனைவியாக நடித்திருப்பார்.
கவுண்டமணிக்கு பல படங்களில் ஷாம்லி, வாசுகி, கோவை சரளா, மனோரமா ஜோடியாக நடித்திருக்கின்றனர். செந்திலுக்கு பல படங்களில் ஜோடியாக கோவை சரளா நடித்திருப்பார்.
வடிவேலுவுக்கு பல படங்களில் ஜோடியாக கோவை சரளா நடித்திருக்கிறார். சில படங்களில் சோனா நடித்திருக்கிறார். விவேக் ஜோடியாக பல படங்களில் பல புதுமுக நாயகிகள் நடித்திருக்கின்றனர்.
ஆனால் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் அவர்களும் காமெடி நடிகைகளாக தான் இருப்பர். அதனால் அந்த ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும். பெரிய வித்யாசம் இருக்காது.
இந்நிலையில் மாமன்னன் படத்துக்கு பிறகு மீண்டும் பகத்பாசில், வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிப்பது, 1990களின் கனவுக்கன்னி என்பதுதான் இதில் ஹைலைட்.
இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் புதுவசந்தம் படத்தில் நாயகியாக நடித்த நடிகை சித்தாரா, நடிகர் வடிவேலுக்கு இந்த படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்.
சித்தாரா இப்போதும் டிவி சீரியல்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். 50 வயதாகியும் திருமணம் செய்வதில்லை என்ற நிலையில் இருந்து வருகிறார்.
முன்னணி மாஜி ஹீரோயினான சித்தாரா, காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடிப்பது ரசிகர்களிடையே பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.