நடிகர் கமல்ஹாசனின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் என்ற படம் உருவாகியுள்ளது.
சிவகார்த்திகேயன்
இந்த படத்தை ரங்கூன் என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாக கூறப்படுகிறது.
டீசர் வெளியானது
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16ம் தேதி, இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியானது.
இதில் இடம்பெற்ற சில காட்சிகள், இஸ்லாமியருக்கு எதிரான காட்சிகளாக இருந்ததாக கூறப்படுகிறது.
காஷ்மீர் போன்ற ஒரு இடத்தில் எடுக்கப்பட்ட அந்த காட்சியில், இந்திய ராணுவ வீரரை, இஸ்லாமியர் ஒருவர் பிடித்துக்கொள்கிறார்.
அப்போது சுற்றியிருக்கும் சிறுவர்களிடம், நீங்கள் சுதந்திர போராளிகள், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அவர் சுதந்திரம் வேண்டும் என்று கூறுவது போல, அந்த காட்சி இருந்துள்ளது.
இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு
ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன் 2013ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை எடுத்திருந்தார்.
அப்போது இஸ்லாமியருக்கு எதிரான கருத்துகள் அந்த படத்தில் இருப்பதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த பிரச்னையில் பல்வேறு அமைப்புகளுடன் கமல்ஹாசன் சமாதானம் பேசி, அவர்களுக்கு விஸ்வரூபம் படத்தை போட்டுக் காட்டிய பிறகுதான், அந்த படம் ரிலீஸ் ஆனது.
அப்போதுதான், கமல்ஹாசன் இந்த நாட்டை விட்டே போகிறேன் என்று சொன்னது பயங்கர டிரண்டிங் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்டன குரல்கள்…
இப்போது மீண்டும் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்துக்கு, இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் எதிர்ப்பும், கண்டன குரல்களும் கிளம்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன், கமல் படங்களை எரித்து, அமரன் படத்தை வெளியிடாமல் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
அயலான் படம் தந்த தோல்வியால் துவண்டு போயிருந்த சிவகார்த்திகேயன், அமரன் படத்தை தான் மலை போல நம்பியிருக்கிறார்.
ஆரம்பமே பெரிய சிக்கல்
இப்போது அமரன் ஆரம்பமே பெரிய சிக்கலாக மாறியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு எதிராக இஸ்லாமிக் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது, பயங்கர வைரலாகி வருகிறது.