தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய இமேஜ் இருந்தது. அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு கட்டத்தில் மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இருந்தது. எம்ஜிஆர் ரஜினிகாந்த் வரிசையில், இப்போது அதிக செல்வாக்கு இருப்பது ஒரே ஒரு நடிகருக்கு தான்.
அவர் படம் எப்படி இருந்தாலும், வசூலில் பெரிய வெற்றி பெறுகிறது. அதற்கு காரணம் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் மிகப்பெரிய அபிமானம் தான். அந்த அபிமானத்தையே மூலதனமாகக் கொண்டு வருகிற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சித் தலைவராக, முதல்வர் பதவிக்கு போட்டியிடும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்.
விஜய்
அவர்தான் நடிகர் விஜய். நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அடுத்து தனது 69 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதல் இரண்டு இடங்களில் இருப்பது நடிகர் விஜய் தான். அவரது நடிப்பில் வெளியாகும் படங்களை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்களை போட்டி போடுகின்றன.
குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. அதேபோல் பீஸ்ட் படமும், வாரிசு படமும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும், அந்த படங்களும் பலநூறு கோடிகளை சம்பாதித்து கொடுத்தது என்பது நிதர்சனமான உண்மை.
சம்பளம் ரூ. 250 கோடி
தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்துக்காக நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நடிக்க உள்ள 69 வது படத்தில் 250 கோடி ரூபாய் சம்பளம் பெற போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விஜயின் 69வது படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது.
காளி வெங்கட்
நடிகர் காளிவெங்கட் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பல படங்களில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். குறிப்பாக இந்தியா பாகிஸ்தான், ராஜா மந்திரி, கொடி, மாரி 1 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அநீதி படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
எப்படி இருப்பார்
இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து நடிகர் காளி வெங்கட் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறுகையில், விஜயுடன் நடிக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன், எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. அவர் மிகப்பெரிய நடிகர். ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பார் என்று நான் ஒரு கற்பனை செய்து வைத்திருந்தேன்.
நேர்மாறாக இருந்தார்
ஆனால் அதற்கு நேர்மாறாக இருந்தார் விஜய். அவர் அவ்வளவு எளிமையாகவும் இயல்பாகவும் இருந்தார். அவரிடம் ஒரு பெரிய நட்சத்திரம் என்பதையே அவர் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் காட்டிக் கொள்ளவில்லை. அவர் அப்படி இருப்பார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை, என்று காளி வெங்கட் கூறியிருக்கிறார்.
காளி வெங்கட் தெறி, மெர்சல் உள்ளிட்ட சில படங்களில் விஜயுடன் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் இப்படி எளிமையான மனிதராக இருப்பார் என்று நான் எதிர்பாக்கல என்று அவருடன் நடித்த அனுபவம் குறித்து பேசியிருக்கிறார் நடிகர் காளிவெங்கட்.