சினிமா நடிகர் நடிகைகள் மீது எப்போதுமே ரசிகர்களுக்கு ஒரு அலாதியான ஈர்ப்பும், கவனமும் உண்டு. அதனால் தான் அவர்கள் அதிகளவில் விளம்பர படங்களில் நடிக்கின்றனர்.
ரசிகர்களை கவரும் விளம்பரங்கள்
ஏனெனில் அவர்கள் உடுத்தும் ஆடைகள், அவர்கள் உண்ணும் உணவுகள், அவர்கள் பயன்படுத்தும் ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள், டூத் பேஸ்ட், சோப், பர்ப்யூம் போன்றவற்றை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் போது அந்த நடிகர்கள் மீது அதிக அபிமானம் காரணமாக, ரசிகர்கள் அவர்கள் பயன்படுத்தும் அதே பொருட்களை நாமும் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு விருப்பத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
பிராண்டட் பொருட்கள்
அந்த வகையில் ஜவுளிக்கடை, நகைக்கடை விளம்பரங்கள் பர்னிச்சர் பொருட்கள், கடிகாரங்கள், காஸ்மெட்டிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், டீத்தூள், காபி தூள், உணவு பொருட்கள், பெண்களுக்கான அலங்கார சாதனங்கள் என எல்லா விதமான விற்பனைகளையும் நடிகர்கள் நடிகைகள் வந்து விளம்பரம் செய்கின்றனர்.
அதேபோல் குளிர்பானங்கள், உணவு வகைகள், மக்கள் பயன்பாட்டு பொருட்கள் என பிராண்டட் அயிட்டங்களை மிக பிரபலமான நடிகர், நடிகைகள் வந்து விளம்பரப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.
சாதாரண மனிதர்களாக…
ஆனால் அதே நேரத்தில் மிகப்பெரிய நடிகர்களாக இருப்பவர்கள் கூட, மிக சாதாரணமாக ரோட்டோர தள்ளுவண்டி கடைகளில் டிபன் சாப்பிடுவது, பரோட்டா சாப்பிடுவது, ரோட்டோர ஓட்டல்களில் விற்கப்படும் பலகார கடைகளில் பலகாரம் வாங்கி சாப்பிடுவது, மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது என்று மிக எதார்த்தமான வாழ்க்கை வாழ்பவர்களும் இருக்க தான் செய்கின்றனர்.
பொருட்கள் தரம் முக்கியம்…
அதில் சீரியல் நடிகர்களும், நடிகைகளும் அவ்வாறு சாதாரணமாக இருக்கின்றனர். லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் வருமானம் சம்பாதித்தாலும் அடிமட்ட நிலையில் இருந்து வந்த பலரும், உடனே ஒரு பெரிய அளவிலான பிராண்டட் வாழ்க்கைக்கு அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதில்லை. பொருட்கள் தரமாக இருந்தால் பிராண்டட் தேவையில்லை என்ற அடிப்படையில், எந்த விதமான பொருட்களையும் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
எந்த விதமான உடைகளையும் அணிந்து கொள்கின்றனர். எந்தவிதமான இடங்களிலும் வாழப் பழகிக் கொள்கின்றனர். இதுதான் எதார்த்த வாழ்க்கை என்று புரிந்து கொண்டவர்களுக்கு சினிமாவோ சீரியலோ டாம்பீக வாழ்க்கையை வாழ வைப்பதில்லை. அவர்களது உள்ளுணர்வு தான் மிக எதார்த்தமான வாழ்க்கைக்குள் அவர்களை சவுகரியமாக வைத்திருக்கிறது.
சேரன் – கஸ்தூரி
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சேரன், நான் பாரிஸ் கார்னரில் உள்ள ஒரு பிளாட்பார கடையில்தான் இன்னும் எனக்கான டிரஸ்களை வாங்கிக் கொண்டு இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.
நடிகை கஸ்தூரி, பிரபலமான முன்னணி நிறுவனத்தில் பிராண்டட் செப்பல் ரூ. 4500 ரூபாய்க்கு வாங்கி, ஒரே மாதத்தில் பிய்ந்து கிழிந்து விட்டதாக, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு புலம்பி இருந்தார்.
நடிகர் விஜயகாந்த், பொள்ளாச்சியில் உள்ள ரோட்டோர கடைகளில் பரோட்டா வாங்கி வரச் சொல்லி, காருக்குள்ளேயே அமர்ந்து சாப்பிடுவாராம்.
நடிகர் கவுண்டமணி, கிராமப்புறங்களில் படப்பிடிப்பு நடந்தால் அங்கு வீட்டு சமையல் செய்யும் வீடுகளுக்கு சென்றுதான் சாப்பிடுவது வழக்கம்.
இப்படி எத்தனை உயரத்தில் வசதி நம்மை வைத்திருந்தாலும், யதார்த்த வாழ்க்கை வாழ பழகி விட்ட கலைஞர்களும் இருக்கவே செய்திருக்கின்றனர்.
டாக்டர் சர்மிகா
இதுகுறித்து டாக்டர் சர்மிகா ஒரு நேர்காணலில் கூறியதாவது,
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடிக்கும் லாவண்யா போன்றவர்கள் பிராண்டட் பொருட்களை வாங்குவதில்லை. அந்த பக்கமே இவர்கள் போவது இல்லை. மிக சாதாரணமான 500, 999 ரூபாய் என சாதாரண பொருட்களாக இருந்தாலும், அவர்கள் பயன்படுத்தும் போது அது பிராண்டட் புரடக்ட்டுகளாக மாறி விடுகிறது. அவர்கள் ஹெட் செட் வாங்குவதாக இருந்தாலும், ஒரு பேக் வாங்குவதாக இருந்தாலும் பிராண்டட் வாங்கப் போவதில்லை.
பிராண்டட் முக்கியமல்ல
அதை நான் பார்த்த பிறகுதான், ஓகே அதை வாங்குவது முக்கியமல்ல, அதை எப்படி கேரி பண்ணுவது என்பதுதான் முக்கியம் என்று எனக்கு புரிந்தது. நம்முடைய கான்பிடன்ட் லெவல் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதுதான் அந்த பொருளின் மதிப்பாக இருக்கிறது. பிராண்டட் பயன்படுத்தி நாம் ஒன்றும் பெரிய ஆள் ஆகப் போவது இல்லை.
என்ன தேவையோ அதை மட்டும் வாங்கு
அதன்பிறகு அடக்கி வாசி என்ற பார்மூலா படி எங்கு ஷாப்பிங் சென்றாலும், நமக்கு என்ன முக்கிய தேவையோ அதை மட்டுமே வாங்குவது என்ற பழக்கத்துக்கு வந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் டாக்டர் சர்மிகா.
லாவண்யா பயன்படுத்தும் பிராண்ட்…
பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா பயன்படுத்துவது எல்லாம் Brand கிடையாது. பிராண்டட் இல்லாத பொருட்களை பயன்படுத்தி, அதையே பிராண்ட் ஆக்கி விடுகின்றனர் என்று மருத்துவர் சர்மிகா ஓப்பனாக பேசியிருக்கிறார்.