பொது இடங்களில் நடிகர், நடிகைகளை பார்த்து விட்டால் தங்களது அபிமான நட்சத்திரங்களை பார்த்து விட்ட சந்தோஷத்தில், ஆரவார கூச்சலிட்டு அவர்களது பெயரை சொல்லி அழைப்பதும், அவர்களுடன் செல்பி எடுக்க முயற்சிப்பதும் தொடர்ந்து நடக்கிறது.
விஜய்
நடிகர் விஜய் இப்போது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏறக்குறைய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருப்பதாக தெரிகிறது.
அதுவும் விஎப்எக்ஸ் எனப்படும் தொழில்நுட்ப பணிகளுக்காக நடிகர் விஜய் சமீபத்தில் அமெரிக்கா புறப்பட்டு சென்றார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் 69வது படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.
தமிழக முதல்வர் பதவி
தொடர்ந்து அடுத்த 2025ம் ஆண்டு முதல், முழு நேரமும் அரசியலில் ஈடுபட்டு 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, தனது கட்சியை பெருவாரியாக வெற்றி பெற்று தமிழக முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதுதான் நடிகர் விஜய்யின் திட்டம்.
நடிகர் விஜய் கட்சியை துவங்கியதில் இருந்தே, மற்ற நடிகர்களை போல் எதிர்மறையான விமர்சனங்கள் விஜய் மீது அதிகமாக எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முக்கிய காரணம், அவர் தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழந்த பின்பு, அரசியலுக்கு வரவில்லை.
சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி
பெரும்பாலான சினிமா நடிகர்கள், சினிமாவில் மார்க்கெட் இழந்த பிறகு தான் அரசியல் பக்கம் வருவார்கள். இப்போது தமிழ் சினிமாவில் 200 கோடி ரூபாய் ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கும் உச்சநிலையில் இருக்கும் விஜய், இப்படி தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அரசியலுக்கு வருவது மக்களுக்கு சேவை செய்யவே என்ற நோக்கத்தில் என்பதால், பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
ரசிகர்கள் வரவேற்பு
நடிகர் விஜய் எங்கு சென்றாலும், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் ஆரவாரமும் அவரை காண்பதற்கு பெரும் கூட்டமும் கூடி விடுகிறது. சமீபத்தில் கேரளா, புதுச்சேரி, திருவனந்தபுரம் என பல பகுதிகளிலும் விஜய்க்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வரவேற்பும் ஆரவாரமும் தந்து அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் ரசிகை
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற விஜயை, சென்னை விமான நிலையத்தில் ஒரே ஒரு ரசிகை பார்த்துள்ளார். அண்ணா விஜய் அண்ணா, அண்ணா விஜய் அண்ணா என்று பலமுறை கத்தி அவர் அழைத்தும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. இதனால் மனம் வருத்தப்பட்டு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, தளபதியின் தீவிரமான ரசிகை நான். தளபதி விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு அவர் சி எம் ஆவார். எங்கள் குடும்பம் மொத்தமுமே அவருக்கு தான் ஓட்டு போடும்.
விஜய் திரும்பிக்கூட பார்க்கவில்லை
அக்காவை வழியனுப்ப நான், விமான நிலையத்துக்கு வந்து இருந்தேன். விஜயை அடையாளம் கண்டு கொண்டதும், கூப்பிட்டேன். ஆனால் அவர் திரும்பி கூட பார்க்காதது வருத்தம் இருக்கிறது என வருமிளா என்னும் அந்த ரசிகை வருத்தத்துடன் பேசி உள்ளார்.
அந்த பெண் தூரத்திலிருந்தும், கண்ணாடிக்கு வெளியே நின்றும் கத்தியதால் விஜய்க்கு கேட்டிருக்காது என்று ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் அண்ணா… விஜய் அண்ணா…
மேலும் அவர் நடிகர் விஜயை ஆரம்பத்தில் விஜய் என்று அழைத்திருக்கிறார். அதன் பின்னர் அண்ணா என்று அழைக்குமாறு, பக்கத்தில் இருந்தவர்கள் சொல்ல, அதன் பின்னர் தான் விஜய் அண்ணா விஜய் அண்ணா என்று அவர் அழைத்ததாகவும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விமான நிலையத்தில் விஜய்யை அண்ணா அண்ணா என்று கத்திக் கத்தி கூப்பிட்டேன்.ஆனால், அவர் கண்டுக்கவே இல்லை என்று அந்த பெண்மணி வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.