தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டும், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு மாபெரும் கலைஞனாக தன்னை நிரூபித்து விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை எப்போதுமே அவர்கள் மீது ஒரு சிறந்த நடிகர் என்ற பார்வை மட்டுமே இருக்குமே தவிர, ரசிகர்களுக்கு அவர் மீது வேறு எந்த விமர்சனமுமே இருக்காது.
அவர் ஒரு கேரக்டராக நடிக்கும் போது, அந்த கேரக்டராக மட்டுமே அவரை பார்ப்பார்கள். அந்த அளவுக்கு மிகவும் நாகரிகமாகவும், பண்பாளராகவும் நடிக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் இன்னும் இருக்கின்றனர். அவர்கள் மீது எந்த விமர்சனமும், சர்ச்சையும் இருக்காது. ஏனெனில் ஒரு கலைத்துறை கலைஞனாக மட்டுமே அவர்களது பங்களிப்பு இருக்கும்.
ராஜேஷ்
தமிழ் சினிமாவில் மிக முக்கியமானவர் நடிகர் ராஜேஷ். மிக திறமையான நடிகர். அற்புதமான மனிதர் என்று பலராலும் பாராட்டப்பட்டவர்.
குறிப்பாக அவர் மிகச்சிறந்த படிப்பாளி. எப்போதும் புத்தகங்களை வாசிப்பதில் அவர் மிகுந்த ஆர்வமும், அக்கறையும் கொண்டவர். நல்ல எழுத்தாளர்கள் புத்தகங்களை எப்போதும் வாசிப்பதுதான் அவரது முக்கியமான பொழுதுபோக்கு.
வாசிப்பாளர்
சினிமாவில் நடிக்கும் போது, அவரது பண்பட்ட தன்மைகள் வெளிப்பட காரணம், அவர் ஒரு தீவிர வாசிப்பாளர் என்பதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
மன்னார்குடியில் பிறந்தவர்
கடந்த 1949ம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தவர் ராஜேஷ். இவர் கிறிஸ்துவ மதம் பின்பற்றி வாழ்ந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியிலும் படித்தவர்.
தொடர்ந்து ராஜேஷ், சென்னையில் பள்ளி ஆசிரியராக சில ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.
அவள் ஒரு தொடர்கதை
கடந்த 1973ஆம் ஆண்டில், தனது 24 வது வயதில் அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் 150 படங்களுக்கு மேல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.
குறிப்பாக கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், தாய் வீடு, ஜெய்ஹிந்த், கன்னிப்பருவத்திலே, பயணங்கள் முடிவதில்லை, பொங்கலோ பொங்கல், ராசாத்தி ரோஜாக்கிளி, பெண் புத்தி பின்புத்தி, மகாநதி, மந்திரப் புன்னகை, சின்னப்பதாஸ் உள்ளிட்ட பல படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
விஜய் சேதுபதியுடன்…
கடைசியாக அவர் விஜய் சேதுபதியுடன் தர்மதுரை படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்திருந்தார். நடிகர் ராஜேஷ் பல படங்களில் டாக்டர் கேரக்டரில்தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபமாக நடிப்பதை குறைத்துக்கொண்ட நடிகர் ராஜேஷ், ரியல் எஸ்டேட் பிஸினஸ்சில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மகன், மகள்
கடந்த 1983 ஆம் ஆண்டில் ராஜேஷ் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தீபக் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர். சமீபத்தில் சமூக வலைதளங்களில் தீபக், திவ்யா புகைப்படங்கள் வைரலானது. இதுதான் பிரபல நடிகர் ராஜேஷின் மகனா, மகளா என்று பலரும் ஆச்சரியப்பட்டு அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.