காமெடி நடிகர்களாக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் நடிகர்கள் எல்லோரும் மிகப்பெரிய நட்சத்திர ஹீரோவாக பேசப்படுவதில்லை.
அவர்களது திறமையும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படுவதில்லை. ஆனால், அதற்கு விதிவிலக்காக இருப்பவர் தான் நடிகர் சூரி.
ஹீரோவாக கலக்கும் சூரி:
காமெடி நடிகராக மிகவும் மோசமான உடல் தோற்றம் கொண்டு சினிமாவில் அறிமுகமான புதிதில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் தான் நடிகர் சூரி .
இருந்தாலும் இவர் தொடர்ந்து தனது முயற்சியை விடாமல் திறமையை நிரூபித்துக் கொண்டே இருந்தார். பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார் சூரி.
பல வருடம் முயற்சிக்குப் பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தினார்.
அந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த நடிகர் சூரியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டக்கூடியதாக இருந்தது.
இந்த படத்திற்காக சூரி தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாவும் கட்டுமஸ்தான தோற்றத்தை பெறவும் மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வெறித்தனமாக உடலை கொண்டுவந்தார்.
அதன் பின்னர் ஹீரோ ரேஞ்சுக்கு அவர் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் மிரள வைத்தார். அந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியும் வசூல் சாதனையும் புரிந்தது.
கவனத்தை ஈர்க்கும் “கருடன்’ படம்:
தொடர்ந்து அடுத்தடுத்து சூரிக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் தேடிக் கொண்டு வருகிறது. அப்படித்தான் தற்போது ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் “கருடன்” என்ற திரைப்படத்தில் சூரி நடித்திருந்தார் .
இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் சூரியுடன் சேர்ந்து சசிகுமார் , உன்னி முகுந்தன் மற்றும் பலர் முக்கிய இடங்களில் நடித்திருந்தார்கள் .
விடுதலை படத்திற்கு பிறகு வெளியான இந்த படத்தில் சூரியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டக்கூடியதாக இருந்தது .
அத்துடன் முன்னதாக படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகிய போது படத்தின் மீதான கவனம் மற்றும் சூரியின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருந்தனர்.
அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யும் விதத்தில் படம் வெளியாகி நல்ல வசூல் ஈட்டியுள்ளது. இப்படத்திற்கு நல்ல விமர்சனமும் வசூலும் கிடைத்து வருகிறது.
மேலும், இந்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்த ஆடியன்ஸ் பலபேர் சூரியன் நடிப்பை வெகுவாக பாராட்டியதால் இந்த படத்திற்கு கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது .
மூன்று நாட்களில் ரூ.17 கோடி:
அதன்படி கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்படம் ரூ.17 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் மீண்டும் சூரிக்கு மகுடம் சூட்டி இருக்கிறது.
காமெடி நடிகனாக இருந்து தனது திறமையால் இன்று உச்ச நடிகராக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருக்கும் சூரி ஒவ்வொரு திரைப்படத்திலும் தனித்திறமையை வெளிப்படுத்தி நட்சத்திர ஹீரோ என்று இடத்தை பிடித்திருக்கிறார் .
இப்படியே போனால் டாப் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் வகையில் காமெடி நடிகர் சூரி தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வார் போல என கோலிவுட் சினிமா பேசுகிறது.
மதுரையை சொந்த ஊராகக் கொண்ட நடிகர் சூரி 1997-ல் வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படத்திலேயே முகமறியப்படாத காட்சியில் நடித்துப் போனார்.
தொடர்ந்து மறுமலர்ச்சி, சங்கமம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் முகம் அடையாளம் இல்லாமல் நடித்து சென்றிருக்கிறார்.
முதல் முதலில் இவர் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த திரைப்படம் எது என்று கேட்டீர்களானால் வெண்ணிலா கபடி குழு.
இந்த திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த அந்த காட்சி மிகப்பெரிய அளவில் பிரபலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்ததால் பரோட்டா சூரி என அழைக்கப்பட்டு வருகிறார் .
ஆனால் இந்த திரைப்படத்திற்கு முன்னரே அவர் பல திரைப்படங்களில் நடித்து முகமறியப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பரோட்டா சூரி To ஹீரோ சூரி:
பரோட்டா காட்சிக்குப் பிறகு தொடர்ச்சியாக காமெடி காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு சூரிக்கு கிடைத்து வந்தது.
தனுஷ் சூர்யா விஜய் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் தொடர்ச்சியாக காமெடி ரோலில் நடித்து வந்தார் . இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படமாக பார்க்கப்படுவது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா ,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நிமிர்ந்து நில் , பாண்டிய நாடு, ரம்மி , ஜில்லா , மான்கராத்தே, ரஜினி முருகன் உள்ளிட்ட பால் வேறு திரைப்படங்களில் சூரியின் காமெடி காட்சிகள் அனைத்து தரப்பு மக்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
தொடர்ந்து இப்படி காமெடி நடிகராகவே இருந்து வந்த சூரி தன்னுடைய முயற்சியால் உடலை கட்டுக்கோப்பாக மாற்றிக்கொண்டு ஹீரோவாக மாறி வெற்றி மகுடத்தை சூட்டியுள்ளார்.