தமிழில் பல படங்களில் காமெடி நடிகராக இருந்து வந்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். தமிழில் கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த பிறகும் கூட இவருக்கான அங்கீகாரம் என்பது தமிழில் பெரிதாக கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.
2013 முதல் 2023 வரை எக்கச்சக்கமான தமிழ் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரதீப் கே விஜயன். ஆனால் அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் பெரிதாக அடையாளப்படுத்தப்படும் கதாபாத்திரமாக இல்லாத காரணத்தினால் அவரும் பெரிதாக மக்கள் மத்தியில் பதிவாகவில்லை.
இருந்தாலும் அவரை பார்க்கும் பொழுது பலருக்கும் இவர் ஒரு திரை பிரபலம் என்பது மட்டும் தெரியும் என்ற அளவில் இருந்தது. 2013 ஆம் ஆண்டு வெளியான சொன்னா புரியாது திரைப்படத்தின் மூலமாக முதன் முதலாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.
தமிழில் தொடர்ந்து வரவேற்பு:
ஆனால் அந்த திரைப்படத்தில் அவர் நடிக்கவில்லை. அதனை தொடர்ந்து தெகிடி திரைப்படத்தில்தான் முதன்முதலாக காமெடி நடிகராக அறிமுகமானார். தெகிடி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து அவருக்கு அடுத்த சில திரைப்படங்களிலும் வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்திலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரதீப். அந்த படமும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது.
தொடர்ந்து ஒரு நாள் கூத்து, என்னோடு விளையாடு என்ற திரைப்படங்களில் நடித்தார் மீசைய முறுக்கு திரைப்படத்தில் மாஸ்டர் என்கிற அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தது. தொடர்ந்து மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால், திருட்டுப் பயலே 2, சங்கு சக்கரம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
திடீர் மரணம்:
இரும்புத்திரை திரைப்படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே பெரும்பாலும் வரவேற்பு பெற்ற திரைப்படங்களாகவே அமைந்திருந்தன. தொடர்ந்து ஹீரோ, லிப்ட் இறுதியாக ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான ருத்ரன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் பிரதீப் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது கூட அங்கு இருக்கும் பலருக்கும் தெரியவில்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று யூகமாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் என்னவென்று இன்னமும் உறுதியாக தெரியவில்லை. இந்த நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.