பூண்டு குழம்பு

நிறைய பேர் வீட்டில் பூண்டு குழம்பு செய்ய  பூண்டை முழுதாக போட்டு தான் வைப்பார்கள். ஆனால் பூண்டை அரைத்து பூண்டு குழம்பு வைப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய்-4 டேபிள்ஸ்பூன், கடுகு அல்லது வெங்காய வடகம்-தாளிக்க சிறிதளவு, சின்ன வெங்காயம்-10 தோல் உரித்தது, தக்காளி-1 பழுத்தது , வெந்தயம்-கால்ஸ்பூன், கறிவேப்பிலை-ஒரு கொத்து, பெருங்காயம்-1/4 ஸ்பூன், புளி, பூண்டு-15 லிருந்து 20 ,மிளகாய் தூள்-2 டேபிள் ஸ்பூன், மல்லித்தூள்-1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்.

செய்முறை

வீட்டில் இருக்கும் தடிமனான கடாயை வைத்து விட்டு, 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அதில்  வெங்காய வடகம் இருந்தால் போடவும் அத்துடன் சிறிதளவு கடுகு சேர்த்துக் கொள்ளுங்கள். 

கடுகு நன்றாக பொரிந்ததும், சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின்பு நறுக்கிய தக்காளி பழத்தை போட்டுக்கொள்ள வேண்டும். 

பின்னர் பெருங்காயத்தூள் போட்டு, தக்காளியின் பச்சை வாடை போகும் வரை வதக்கி, புளி கரைசலை ஊற்ற வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் புளிக்கரைசல் மிகவும் கட்டியாக இருக்கக்கூடாது. நீர்ம தன்மையோடு தான் இருக்க வேண்டும். 

இதற்கு காரணம் புளி கரைசல் நன்றாக கொதித்து, பச்சை வாடை போக சுண்ட வேண்டும். அப்போதுதான் குழம்பின் ருசி அதிகரிக்கும்.

புளியை கரைசலை, ஊற்றிய பின் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு அடுப்பை வேகமாக வைத்து குழம்பு தளதளவென்று நன்றாக 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதன்பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு ஒரு தட்டு போட்டு மூடி விடுங்கள், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை குழம்பை திறந்து, ஒரு முறை கிளறி விட வேண்டும். குழம்பு ஒரு பக்கம் கொதிக்கட்டும்.

இப்போது உறித்து வைத்திருக்கும் பூண்டு களை ஒரு பாத்திரத்திலோ அல்லது குக்கரில் போட்டு, 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

பூண்டு நன்றாக வெந்த பின்  மத்தினை போட்டு மைய கடைய வேண்டும். கடைய முடியாதவர்கள், அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். 

பூண்டை அரைக்கும்போது போது, பேஸ்ட் மாதிரி இருக்கக்கூடாது. கொஞ்சம் தண்ணியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் அந்த குழம்பானது நன்றாக மிதமான தீயில் கொதித்து கொண்டிருக்கிறது அல்லவா? அதில் குழம்பு முக்கால்வாசி தயாரானதும்,  அரைத்து வைத்திருக்கும் பூண்டை ஊற்ற வேண்டும்.

 மீண்டும் குழம்பை திறந்தபடியே 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். 10 நிமிடம் கொதித்த பின்பு, குழம்பிற்கான உப்பு, காரம், புளி சரிபார்த்து, போட்டு விட வேண்டும்.

குழம்பில் இருந்து நீங்கள் ஊற்றிய நல்லெண்ணெய்  தனியாக பிரிந்து மிதக்க வேண்டும். 

தண்ணீர் நிலையில் இருக்கும் புளியானது நன்றாக கொதித்து சுண்டி குழம்பாக மாறுவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் வரை எடுக்கும். இறுதியாக மல்லித்தழை தூவி குழம்பை இறக்கி சாப்பிட வேண்டியது தான்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …