Tamil Nadu State Election : விதிமீறல் தேர்தலுக்கு இதுவரை முன்மாதிரியாக பேசப்பட்ட ‘திருமங்கலம் பார்முலா’வை தோற்கடிக்கும் வகையில், கோவை மாநகராட்சியில், ஒரே வாக்காளருக்கு, பணத்துடன் பல விதமான பரிசுப் பொருட்களை பல்வேறு கட்சிகளும் கொடுத்துள்ள புதிய ‘பார்முலா’அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் நடக்கும் தேர்தல் அத்துமீறல்களுக்கு ‘திருமங்கலம் பார்முலா’ என்ற வார்த்தையே இதுவரை அடையாளமாகவும், அத்தாட்சியாகவும் இருந்தது. கடந்த 2009ம் ஆண்டில், மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நடந்த அத்துமீறலே அதற்கு காரணம்.
ஓட்டுக்கு 1K – 5K
அந்த தேர்தலில், தி.மு.க.,வினர் வீட்டு வீடு ஓட்டுக்கு 1,000 – 5,000 ரூபாய் வரை கொடுத்து, தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தனர். அவர்கள் அதற்கு பயன்படுத்திய யுக்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டன.
அதுவே இன்று வரையிலும், ‘திருமங்கலம் பார்முலா’ என்ற அரசியல் அடைமொழியை உருவாக்கியது.அதற்கு பின்பே, ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணத்துக்கு டோக்கன் கொடுக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.
அந்த தேர்தல்களில் எல்லாம், ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் என்று தான் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது நடக்கும் கோவை மாநகராட்சி தேர்தலில், பணத்துடன் பல விதமான பரிசுப் பொருட்களை, பல்வேறு கட்சிகளும் வாரி வழங்கும் அத்துமீறல் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ.,வும் ஆளும்கட்சிக்கு இல்லாததால், இந்த மாவட்டத்துக்கென்று ஒரு அமைச்சரும் இல்லை. எனவே, கோவை மாநகராட்சியை கைப்பற்றியே தீர வேண்டுமென, எவ்வளவு செலவழிக்கவும் ஆளும்கட்சி தயாராகஉள்ளது.
அதற்கு இணையாக, அ.தி.மு.க.,வும் இந்த தேர்தலை கவுரவ பிரச்னையாக எடுத்துக்கொண்டு, கோவையில் வெற்றி பெற தீவிரமாக போராடி வருகிறது.தி.மு.க., சார்பில், அனைத்து வார்டுகளிலும் ‘ஹாட் பேக்’ பாத்திரங்கள், சேலை, வெள்ளிக் கொலுசு ஆகியவற்றுடன் 1,000 அல்லது 2,000 ரூபாய் தரப்பட்டுள்ளது.
நாளைக்குள் வேறு ஏதோ ‘பெரிய பரிசு’ தரப்படும் என்ற தகவலும் பரவி வருகிறது.அ.தி.மு.க., சார்பிலும் ஓட்டுக்கு 1,000 – 3,000 ரூபாய் வரை பணமும், சில வார்டுகளில் வெள்ளி காமாட்சி விளக்கும் வழங்கப்பட்டுள்ளது.
புது ஃபார்முலா..
இதில், மிகப்பெரிய ஆச்சரியமாக சில வார்டுகளில் பா.ஜ., சார்பிலும், வாக்காளர்களுக்கு 1,000 – 2,000 ரூபாய் பணம்தரப்பட்டுள்ளது. இதனால் பல வார்டுகளில் போட்டி மிகவும் கடுமையாக உள்ளது. ஒரு சில பகுதிகளில், ஒரே வாக்காளருக்கு இந்த மூன்று கட்சியினரின் பணமும், பரிசுப் பொருட்களும் கிடைத்துள்ளன.
ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற ஆளும்கட்சி பணம் கொடுத்த ‘திருமங்கலம் பார்முலா’வை, கோவையின் புதிய ‘பார்முலா’ தோற்கடித்துஉள்ளது. எது, எப்படி ஆயினும், கோவை வாக்காளர்கள் காட்டில் தற்போது பணமழை பொழிந்து வருகிறது.
ஓட்டுக்கு 5,000 ரூபாய்..
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தி.மு.க., சார்பில், 27 வார்டுகளில் பலமான வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.சில வார்டுகளில், தி.மு.க., வேட்பாளர்களை மிஞ்சும் அளவிற்கு அ.தி.மு.க., வேட்பாளர்கள் அதிகபட்சமாக ஓட்டுக்கு 5,000 ரூபாய் வழங்கியுள்ளனர்.
இது, நகராட்சியையே அதிர வைத்திருக்கிறது.மற்றொரு வார்டில், அ.தி.மு.க., வேட்பாளர் அரிசி மூட்டை, காய்கறி, பரிசுப்பொருள், பணம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளைக் கொடுத்து கலங்கடித்துள்ளார்.
காஸ் ஸ்டவ்..
தி.மு.க., வேட்பாளர்கள் பலர் காஸ் ஸ்டவ், இன்டக் ஷன் ஸ்டவ், பணம் என வாரி வழங்கியுள்ளனர்.இவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என, பா.ம.க., வேட்பாளர் ஒருவர் வெள்ளி குங்குமச்சிமிழ், பணம் என வாரி இறைத்து ஓட்டு சேகரித்து வருகிறார்.
ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் கொடுப்பதை அறிந்து, பக்கத்து வார்டு மக்கள் வாய் பிளந்து திகைத்து நிற்கின்றனர்.
உச்ச கட்டம்..
தேர்தல் நாளான இன்று விடியற்காலை ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கிலோ ஆட்டுக்கறி மற்றும் ஒரு கிலோ கோழி கறி என பல வார்டுகளில் தடபுடலாக சப்ளை செய்துள்ளனர்.
குறிப்பாக, உத்தமபாளையத்தில் உள்ள வார்டுகளில் இந்த இறைச்சியை மக்களுக்கு வீடு வீடாக விநியோகிக்க திமுக திட்டமிட்டு இருந்ததாக தேனி மாவட்ட அதிமுக புகார் வைத்துள்ளது.
இதையடுத்தே பறக்கும் படையினர் அதிரடி சோதனை செய்து இறைச்சிகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் தேனி மாவட்ட திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.