பாண்டவர் இல்லம் சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்தவர் அனு. இவரது வில்லத்தனமான நடிப்பை, ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். இவர், கர்ப்பம் ஆனதால், வயிற்றில் வளரும் குழந்தையின் நலன் கருதி, அந்த சீரியலில் இருந்து, பாதியிலேயே வெளியேறி விட்டார்.
இதையடுத்து, இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவ காலத்தில், வலி நிறைந்த அந்த வேதனை நிறைந்த நேரத்தில், அவரது கணவர் உடனிருந்து அவரை கவனித்துக்கொண்டு, பராமரித்தார். அந்த அன்பான நிகழ்வை, மிகவும் நெகிழ்ச்சியுடன் தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அனு.
இந்நிலையில், அனுவின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தப்பட்டிருக்கிறது. இதில், தனது ஆண் குழந்தைக்கு துாய தமிழில், மிக அழகான பெயரை சூட்டி இருக்கின்றனர். அந்த பெயர், ‘வான்வியன்’.
இந்த பெயரை, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அனு, மேலும் இதுகுறித்த ஒரு கவிதையும் எழுதி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு அழகான தமிழ் பெயரை வைத்துள்ளாரே, சீரியலில் வில்லியாக நடித்தாலும் நிஜத்தில், தமிழார்வம் கொண்ட ஒரு சிறந்த தமிழச்சியாக தன்னை வெளிப்படுத்தி இருக்காரே, என சமூகவலைதள வாசிகள், அனுவின் இந்த செயலலை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். மேலும், குழந்தை வான் வியனுக்கு வாழ்த்துகள் தொடர்ந்து குவிந்தபடி உள்ளது.
சமீபத்தில், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நயன்தாரா – விக்னேஷ் சிவன், தங்களது குழந்தைகளின் பெயர்களை அறிமுகப்படுத்தினர்., இதில் உலகம், உயிர் என பெயர்களில் அர்த்தம் வரும்படி வைத்திருந்ததை பார்த்து, பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில், ஒரு சீரியல் நடிகையாக வலம் வரும் அனு, தனது ஆண் குழந்தைக்கு துாய தமிழில் மிக அழகிய பெயரை பெற்று, சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகி விட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது, காலம் முழுக்க அதுதான் அவர்களது அடையாளமாக இருக்க போகிறது. முன்பெல்லாம் நல்ல அழகான தமிழ் பெயர்களை, கடவுள் பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பது வழக்கமாக இருந்தது. இப்போது நடிகர், நடிகைகள் பெயர்களை வைப்பது, விளையாட்டு வீரர்கள் பெயர்களை வைப்பது, கணவன் – மனைவி பெயர்களில் சில எழுத்துகளை எடுத்து, அதை குழந்தைகள் பெயருடன் கலந்து வைப்பது பேஷனாகி விட்டது.
வாயில் நுழையாத, உச்சரிக்க சிரமப்படுகிற பெயர்களை வைத்து விட்டு நாளடைவில் அந்த பெயர்களை, பெற்றோரே அழைக்க சிரமப்பட்டுக்கொண்டு வேறு செல்லமான பெயர்களில் அழைப்பது வழக்கமாகி விட்டது. பெற்றோர் வைத்த பெயர்கள் குழந்தைகளின் பள்ளி சான்றிதழ்களை மட்டுமே அலங்கரிக்கும். அப்படி இல்லாமல், அழகான வான்வியன் என்ற பெயர் உச்சரிக்கவும் மட்டுமின்றி கேட்கவும் மிக அழகாக இருப்பதாக, லைக் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.