அகத்திக்கீரை குழம்பு.

அகத்திக் கீரையில் எண்ணற்ற சத்துக்கள் காணப்படுகின்றது எந்த கீரையிலும் இல்லாத தாது உப்புக்கள் இதில் அதிகம் காணப்படுவதால் நிச்சயமாக மாதத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது

சத்துக்கள்

ஈரப்பதம் – 73 சதம், புரதச்சத்து – 83 சதம். தாதுஉப்புக்கள் – 3.1 சதம், நார்ச்சத்து – 2.2 சதம், மாவுச்சத்து – 12 சதம், கொழுப்புச்சத்து – 1.4 சதம்

தேவையானவை: 

அகத்திக்கீரை (உருவியது) – 2 கப்

சின்ன வெங்காயம் – ஒரு கப்

 பூண்டு – 6பல்

 தக்காளி – 4

 புளி – நெல்லிக்காய் அளவு

 மிளகாய் தூள் – இரண்டரை டீஸ்பூன் தனியாதூள்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

 உப்பு – தேவையான அளவு. 

வறுத்துப் பொடிக்க:

துவரம்பருப்பு – அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்

பச்சரிசி – அரை டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்

மிளகு – அரை டீஸ்பூன் வெந்தயம் -அரை டீஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன். 

தாளிக்க: 

கடுகு – அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – ஒருடீஸ்பூன்

 எண்ணெய் – கால் கப்.

செய்முறை: 

பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். 

அகத்திக்கீரையை நன்கு கழுவி, குக்கரில் அரை கப் தண்ணீர்,தேவையான உப்பு சேர்த்து, 2 விசில் வந்ததும் இறக்கி, 2 நிமிடம் கழித்துத் திறந்துவையுங்கள்.

பூண்டுப் பல்லை நசுக்கிக்கொண்டு, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.  இரண்டு கப் தண்ணீரில் புளியைக் கரைத்து, வடிகட்டி வையுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும் வெங்காயம்,தட்டிய பூண்டு சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்கி, தக்காளி சேருங்கள். 

தக்காளி நன்கு வதங்கியதும், புளிக்கரைசலை சேர்த்து, மிளகாய்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடுங்கள்.

இது நன்கு கொதிக்கும்போது, கீரையை அதனுடன் சேர்த்து,பச்சை வாசனை போனதும், பொடித்து வைத்திருக்கும் மசாலாப் பொடியைத் தூவி, 5 நிமிடம்கழித்து இறக்குங்கள். கம கமவென மணம் பரப்பி, பசியைக் கிளப்பும் இந்தக் கீரைக்குழம்பு இப்போது ரெடி.