மதுரை மீனாட்சி அம்மன் மொட்டை கோபுர முனீஸ்வரர பற்றிய தகவல்கள்

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்பது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் அமைந்துள்ள மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாட்டைக் குறிக்கின்றது. ஒன்பது நிலைகளை கொண்ட இக்கோபுரத்தை, 1564-72ல், கிருஷ்ண வீரப்ப நாயக்கர் கட்டினார். 

ஆனால், என்ன காரணத்தினாலோ, மேற்பூச்சுஇன்றி, முழுமை பெறாமல் நின்று விட்டது. பின், 1623ல், இக்கோபுரம் முழுமை பெற்றது. நீண்ட நாட்கள் மேற்பூச்சின்றி இருந்ததால், மொட்டைக்கோபுரம் என்றழைக்கப்பட்டது. 

கோபுர வாசலில் அமைந்துள்ள முனியாண்டி கோயிலும் மொட்டைக் கோபுரம் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. வடக்கு கோபுரத்தின் அகலம் 66 அடி. மற்ற கோபுரங்களைவிட, சுதைகள் குறைவாக உள்ளதாலும் மொட்டைக்கோபுரம் என்று அழைப்பதாக கூறுகின்றனர். 

வடக்கு கோபுரம் எவ்வளவு முயன்றும் கட்ட முடியாமல் தடைப்பட்ட போது, இக்கோபுரத்தைத் திருப்பணி செய்த நாகப்ப செட்டியார் இங்கு முனீ சுவரர் சாந்நித்யம் இருப்பதை அறிந்து முனீஸ்வரருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார். 

இக்கோபுரம் எழும்பும் போது முனீஸ்வரருக்கும் சன்னதி எழுப்பப்படும் எனச் சத்தியம் செய்தபடி இப்போதுள்ள மகா முனீஸ்வரர் ஆலயத்தை வடக்கு வாசலை ஒட்டி எழுப்பினார்.

அமராவதிபுதூர் வயிநாகரம் நாகப்ப செட்டியார் மொட்டை கோபுரமாக இருந்த வடக்கு கோபுரத்தை, தனது செலவில் 152 அடி உயர பிரம்மாண்ட கோபுரமாக 1878 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்.

1960-63ல் நடந்த திருப்பணியின் போது, கடைசியாக இக்கோபுரத்தில் தான் திருப்பணி முடிக்கப்பட்டது. இக்கோபுர வாசல் வழியாக, இடது புறம் சென்றால், இசைத்தூண்கள் நம்மை வரவேற்கும் என்பதால், வேறு எந்த கோபுரத்திற்கும் இல்லாத பெருமை இக்கோபுரத்திற்கு உண்டு என்றால் அது மிகையில்லை.

மொட்டைக் கோபுரம் என்ற பெயருக் கேற்ப இக்கோபுரத்தில் பிற கோபுரங்களைப் போலச் சுதைச் சிற்பங்கள் கிடையாது. மாடம் போன்ற அமைப்பும் தூண்களும் அமைந்துள்ள கோபுரத்தில் வெள்ளி செவ்வாய் மற்றும் விழா நாட்களில் கோபுரத்தின் உச்சியிலிருந்து முனீஸ்வரர் சன்னதி வரை பூ மாலைகள் பூச்சரங்களாய்த் தொங்கி நிற்கும்.

வடக்கு கோபுரம் கட்டப் படுவதற்கு முன்பே முனீஸ்வரன் என்ற நாட்டுப்புற சிறு தெய்வக் கோவில் சிறிய இடத்தில் அமைந்திருந்தது. 

இக்கோவிலுக்குரிய இடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் மொட்டைக் கோபுரத்தின் அடியில் ஒரு மண்டபமாக இருந்துள்ளது. சிறிய கோவிலாக தொடங்கப் பட்ட முனீஸ்வரன் சன்னிதி மரத்தாலான கதவு இருந்ததாக பக்தர்கள் சொல்கிறார்கள். 

அந்நாளில் தரையோடு உள்ள வளையத்தில் சங்கிலியினை இணைத்து பூட்டுவது உண்டாம்.முனீஸ்வரன் சன்னிதியின் முன்புறம் பெரிய கல்லாலான தூண்கள் உள்ளன.சிறிய பலிபீடமும் ஒரு ஆள் மட்டுமே அமரக்கூடிய இடத்தில் முனியாண்டி சிலையும் அலங்காரத்தோடு அமைந்துள்ளது.