மலையாள சினிமாவில் தற்சமயம் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த பிரச்சனைகள் வெளிப்படையாக வெளியில் தெரிய துவங்கியிருக்கின்றன. இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாக மலையாள சினிமாதான் தற்சமயம் மாறி இருக்கிறது.
எந்த ஒரு மாநில அரசும் எடுக்காத ஒரு நடவடிக்கையை தற்சமயம் கேரளா அரசு எடுத்திருக்கிறது. அதாவது மலையாளம் திரைத்துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து அரசுக்கு தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறி ஹேமா கமிட்டி என்கிற ஒரு கமிட்டியை அமைத்தது கேரளா அரசு.
முக்கிய புள்ளிகள்
ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா என்பவர் தலைமையில்தான் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலா மற்றும் பழம் பெறும் நடிகை சாரதா உள்ளிட்டோர் உறுப்பினராக இருந்தனர் இந்த கமிட்டியின் மூலமாக மலையாளத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகளிடம் பாலியல் தொடர்பான சீண்டல்கள் குறித்த தகவல்களை பெற்றனர்.
இந்த நிலையில் இந்த அறிக்கை நான்கு ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்து வந்தது. சமீபத்தில் சில தினங்களுக்கு முன்புதான் இந்த அறிக்கை வெளியானது. வெளியான நாளிலிருந்து இது அதிக பரபரப்பை ஏற்படுத்த துவங்கி இருக்கிறது.
மோகன்லாலோடு சேர்த்து பல பிரபலங்கள்
மலையாளத்தில் முக்கால்வாசி பல நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இருப்பதாக இந்த அறிக்கை மூலமாக தெரிகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்ரீ லேகா மித்ரா என்கிற நடிகை, பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது புகார் அளித்திருந்தார்.
அதேபோல ரேவதி சம்பத் என்கிற நடிகை நடிகர் சங்க பொதுச்செயலாளர் சித்திக் என்பவர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இப்படி அடுத்த அடுத்ததாக ஒவ்வொரு நடிகர்களின் மீதும் புகார்கள் எழுந்து வந்துள்ளன.
ஆட்டம் கண்ட மலையாள சினிமா
முக்கியமாக மலையாளத்தில் டாப் நடிகர்களாக இருக்கும் பத்து நடிகர்கள் தான் இதில் அதிகமாக பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அது யார் யார் என்பது குறித்த எந்த விவரமும் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து வந்த மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லால் தற்சமயம் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் மட்டுமின்றி நடிகர் சங்கத்தில் இருக்கும் 17 முக்கிய நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்து பதவியை ராஜினாமா செய்து இருக்கின்றனர்.
இந்த நிகழ்வு மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.