Connect with us

அள்ள அள்ள பணம்..! – பங்குச்சந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? – பகுதி 1

Share Market in Tamil

அள்ள அள்ள பணம்..! – பங்குச்சந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? – பகுதி 1

பங்குச்சந்தையா..? பணத்தை போட்டுடாத.. மொத்தமும் போயிடும்..அதெல்லாம் நமக்கு தேவையே இல்லாத வேலை. நமக்கு வரதே போதும், இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படக்கூடாது என தாறுமாறாக வசனங்களை பலர் அள்ளி விடுவதை நாம் கேட்டிருக்கிறோம். அப்படியென்றால் பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பவர்கள் யார்..? என்ற கேள்வி எழுகிறது.

எந்த தொழிலையும் அதனுடைய அடிப்படை கூட தெரியாமல் செய்தால் அது நட்டத்தில் தானே முடியும். ஒரு டீ கடை வைக்கிறோம் என்றால் கூட, அதனை எங்கே வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு எத்தனை டீ ஓடும். எவ்வளவு பால் வாங்க வேண்டியிருக்கும்.

பலகாரம் சேர்த்து போடலாமா..? டீ மாஸ்டர் சம்பளம், கடை வாடகை போக நமக்கு ஏதாவது நிக்குமா..? என்று பல விஷயங்களை நாம் ஆராய்வோம். இதையெல்லாம், தெரியாமல், பால் வாங்க காசு இருக்கும், கடை வாடகை கொடுக்க காசு இருக்கு என்று ஆளே இல்லாத இடத்தில் கடை போட்டால் என்ன ஆகும்.

அதே போல, பங்கு சந்தையை பற்றி தெரியாமல் உள்ளே வந்தால் உங்களை பங்கு பங்காக பிரித்து துவைத்து அனுப்பிவிடும். அதனால், பங்குசந்தையை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பிறகு நாம் உள்ளே நுழைந்தால் கணிசமான பணத்தை சம்பாதிக்கலாம். உடனே, எவ்வளவு போட்டால், எவ்வளவு வரும் என கணக்கிற்கு போய்விடாதீர்கள். பொறுமையுடன் இந்த தளத்தில் வரும் தகவல்களை ஒரு மூன்று மாதம் பின் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு, பங்கு சந்தையில் இறங்கலாமா..? இல்லை, வேண்டாமா..? என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

பணத்தை சம்பாதிக்க பலரும் அவர்களுக்கு தெரிந்த தொழிலை செய்து கொண்டிருகிறார்கள். அதே போல பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பதும் ஒரு தொழில் தான்.

பங்கு சந்தையில் எப்படி பணத்தை அள்ளுவது என்பதை பங்கு சந்தையை பற்றிதெரியாதவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது தான் இந்த தொடரின் நோக்கம்.

நம்முடைய தளத்தில் பங்கு சந்தை பற்றி தொடக்கம் முதல் இறுதி வரை தெரிந்துகொள்ளலாம். பங்கு சந்தை பற்றிய அடிப்படை அறிவே இல்லதாவரா நீங்கள்..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பங்கு சந்தை பற்றிய அறிவை கொடுக்கும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

பங்கு சந்தையில் பணம் போட்டேன்.மொத்தமும் போயிடுச்சி… ஒரு லட்சம் லாஸ்.. பத்து லட்சம் லாஸ் என்று உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் கூற கேட்டிருப்பீர்கள். உடனே, ஆஹா… பங்குசந்தை பக்கம் போகவே கூடாதுப்பா.. என்று நீங்கள் முடிவு செய்திருப்பீர்கள்.

உண்மைதான்,கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை பங்கு சந்தையில் போய் இழந்து விட்ட வர யார் தான் ஒப்புக்கொள்வார்கள். அதே நேரம், பங்கு சந்தையில் முதலீடு செய்து லட்சகணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எப்படி இவ்வளவு பணத்தை அள்ளுகிறார்கள் என்பதை தான் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

வாவ்…! நல்லா இருக்கே..! அப்படியென்றால் இந்த தொடரை படித்துவிட்டு நான் பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க போகிறேன் என்று ரொம்ப மகிழ்ச்சி ஆகிவிடாதீர்கள். ஏனென்றால், இங்கே லாபம் பார்க்கும் முறையை மட்டுமே சொல்லித்தருகிறோம். உங்கள் பணம், உங்கள் உழைப்பு என்பதை மறந்து விடாதீர்கள்.

பங்கு சந்தையில் எந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியுமோ..? அதே அளவுக்கு பணத்தை இழந்து விட்டு போண்டியாகவும் முடியும். பங்கு சந்தை பற்றிய இந்த தொடரை முழுமையாக படித்து புரிந்து கொள்ள கிட்டதட்ட ஒன்று முதல் மூன்று மாதங்கள் ஆகும். அதுவரை பொறுமையாக இருந்து படியுங்கள். இதில் கூறப்படும் முறைகளை வைத்து சந்தையை ஆராயுங்கள்.

எப்படி சந்தையை ஆராய்வது..? சந்தை என்றால் என்ன…? எப்படி நான் முதலீடு செய்வது..? எப்படி நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வது..? போன்றவற்றை நாம் தொடர்ந்து பார்க்கப்போகிறோம்.

சரிங்க, மார்க்கெட்-னா லாபம், நஷ்டம் சகஜம். ஆனா, எப்படி நம்முடைய லாப சதவிகிதத்தை அதிகரிப்பது என்பதை நாம் படிப்படியாக தெரிந்து கொள்வோம்.

மார்க்கெட் என்பது கடல், நீச்சல் தெரிந்தால் பிழைத்துக்கொள்ளலாம். சமயத்தில் நன்றாக நீச்சல் தெரிந்தவர்களும் கடலில் மூழ்கிவிடுவதுண்டு அல்லவா..? அதே போல தான் பங்கு சந்தையும் என்பதை நன்றாக மனதில் பதிய வையுங்கள்.

கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தால், நீங்கள் பங்கு சந்தை பற்றிய அடிப்படை அறிவைபெற்றுவிடுவீர்கள்.மேலும், பங்கு சந்தையில் நுழைந்து பணம் சம்பாதிக்கவும் முடியும். இது தான் பேஸிக். இதனை தெரிந்து கொண்டால் தான் மார்க்கெட்டில் உள்ள நெளிவு சுழிவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அதாவது, ஒரு வீடு கட்டுகிறீர்கள் என்றால் செங்கல், மணல், சிமென்ட்,ஜல்லி, கம்பிஆகியவை வேண்டும். இவையெல்லாம் இருந்தால், வீட்டை கட்டி விட முடியுமா..??? முடியாதல்லவா..? அதற்கான அடிப்படையாக இருக்கும், வீட்டை தாங்கி நிற்க கூடிய பேஸ்மெண்டை முதலில் போட வேண்டும் அல்லவா…?

அது போல கீழ் வரும் கேள்விகள் ஒரு பேஸ் மெண்டை போடுவது போல, அதனை போட்டு விட்டால் அடுத்து மேற்சொன்ன பொருட்களை வைத்து கட கடவென வீடு கட்டி விடலாம். சரியா..? வாங்க பாப்போம் அது என்ன கேள்விகள் என்று..?

கேள்வி 1 : பங்கு சந்தை என்றால் என்ன..?

கேள்வி 2 : எப்படி பங்கு சந்தையில் நுழைவது..?

கேள்வி 3 : பங்கு சந்தையில் நுழைய குறைந்தபட்சம் எவ்வளவு பணம் வேண்டும்..?

கேள்வி 4 : பங்கு சந்தையில் எந்தெந்த வகைகளில் முதலீடு செய்யலாம்..?

கேள்வி 5 : பங்கு சந்தையில் எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் என்று எப்படி தேர்வு செய்வது..?

கேள்வி 6 : தேர்வு செய்த நிறுவனங்களின் பங்குகளை எந்தெந்த வகைகளில் பகுப்பாய்வு (Analysis) செய்வது..?

கேள்வி 7 : எந்த நேரத்தில், எந்த விலையில் வாங்க வேண்டும்.? எந்த நேரத்தில், எந்த விலையில் விற்க வேண்டும்..?

கேள்வி 8 : பங்குகளின் விலையின் ஏற்ற, இறக்கத்தை யார் தீர்மானிகிறார்கள்..? எப்படி, நொடிக்கு நொடி, நிமிடத்திற்கு நிமிடம், நாளுக்கு நாள் பங்குகளில் விலை ஏற்றம் அல்லது இறக்கத்தை சந்திக்கின்றன..?

கேள்வி 9 : பங்கு சந்தையை முழு நேர வேலையாக செய்யலாமா..?

கேள்வி 10 : பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்படமால் இருக்க ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா..?

கேள்வி 11 : பங்கு சந்தையில் என்னால் ஜெயிக்க முடியுமா..? அதற்கான மனநிலை என்னிடம் உள்ளதா..? என்பதை எப்படி அறிந்துகொள்வது..?

கேள்வி 12 : லாப, நஷ்ட விகிதத்தை எப்படி பின்தொடர்வது..?

கேள்வி 13 : சந்தையில் பணம் போடாமல் எப்படி லாப, நஷ்ட அனுபவத்தை பெறுவது..?

இந்த கேள்விகளுக்கான விடை உங்களின் விரல் நுனியில் இருந்தால் நிச்சயம் உங்களால் பங்கு சந்தையில் பணத்தை அள்ள முடியும். இந்த கேள்விகளுக்கான விடைகளை தான் நாம் தொடர்ந்து பார்க்கபோகிறோம்.

குறிப்பாக, இந்தகேள்விகளுக்கான விடையை தேடுவதில் நீங்கள் எந்த அளவுக்கு ஆர்வமாக இருகிறீர்கள் என்பதை பொருத்தான் நீங்கள் லாபத்தை பெறுவதும், நஷ்டத்தை அடைவதும் அமைய போகின்றது.

மேலும், இந்த கேள்விகளின் விடையை எதோ ஒரு மணி நேரத்திலோ, ஓரிரு நாட்களிலே தெரிந்து கொள்ளமுடியாது. அதற்காக, சில வாரங்கள், ஏன் மாதங்கள் கூட ஆகலாம்.

இந்த, பதிவுகளை சொல்லித்தரக்கூடிய நான் வெறுமனே நான் சொல்ல வருவதை சொல்லிவிட்டு போவதில்லை. படிக்கும் போது உங்களுக்கு ஏற்படும் எல்லாவித சந்தேகங்களுக்கும் விடையையும் தரும் நோக்கில் முகநூளில் பிரத்யேகமாக ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளேன். உங்களின் கேள்விகளை நீங்கள் நம்முடைய முகநூல் பக்கத்தில் கேட்கலாம். அதற்கான விடையை நான் தருவேன்.

நீங்கள் கேட்கும் கேள்விகளே உங்களையும், உங்களை போன்ற நம்முடைய நண்பர்களையும் பங்குசந்தை குறித்த முழுமையான அறிவை பெற வித்திடும். அதனால், கடகடவென கதையை போல படிக்காமல், பொறுமையாக சொல்ல வரும் விஷயங்கள் உள்வாங்கி படியுங்கள்.

சரி நண்பர்களே,மேலே உள்ள 13 கேள்விகளுக்கும் விடை தேடும் பயணத்தை இங்கிருந்து நாம் தொடங்குவோமா..?

வாருங்கள் போகலாம்..!

இன்று முதல் கேள்விக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து விடுவோம்.. தொடர்ந்து அடுத்தடுத்த கேள்விகளுக்கான அடுத்தடுத்த நாட்களில் பகுதி பகுதிகளாக பாப்போம்.

நம்முடைய மூளை மெமரி கார்டை விட சக்தி வாய்ந்தது என்றாலும், அது ஒன்றும் மெமரி கார்டு இல்லை, ஒரே நாளில் அனைத்தையும் ட்ரான்ஸ்ஃபர் செய்துவிடுவதற்கு. நண்பன் படத்தில் “ஹார்ட்டிலே பேட்டரி” என்ற பாடலில், ” மூச்சு முட்டும் பாடம் எல்லாம் சோடா கோலியா..! நீ லோடு மேல லோடு ஏத்த மூளை லாரியா…? மூளையைத்தான் மூட்டக்கட்டு…! Follow Your Heartu பீட்டு, ரூட்டு..!” என்ற வரிகளை நினைவில் கொண்டு பொறுமையாக கற்று உணருவோம். இந்த பகுதியை நான் ஒரு ஆசிரியர் போலவும், உங்களை ஒரு மாணவன் போலவும் கொண்டு செல்ல எனக்கு துளி கூட விருப்பமில்லை. நீங்கள் என்னுடைய நண்பன், நான் உங்களுடைய நண்பன் என்ற பாதையில் தொடரவே விருப்பம். சரியா நண்பர்களே.

சரி வாங்க, கேள்வி எண் 1: பங்கு சந்தை என்றால் என்ன.? என்று பாப்போம்..!

பங்கு + சந்தை = பங்குசந்தை. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தங்களில் தொழில் வளர்ச்சிக்காக எந்தெந்த முறைகளில் பணத்தை பெறலாம்…? அந்த நிறுவனத்தின் நிறுவனர் அல்லது நிறுவனர்கள் அவர்களுடைய சொத்துகளை அடமானம் வைத்து வங்கிகளில் கடன் வாங்கலாம். அல்லது, அவர்களுடைய நண்பர்களிடத்தில் பணம் வாங்கி தொழிலில் முதலீடு செய்து தொழிலை தொடங்கவே அல்லது விரிவுபடுத்தவோ செய்யலாம்.

அதே போல, தான் ஒரு நிறுவனத்தை காட்டி, அதனுடைய வேலை என்ன..? என்ன பொருள் தயாரிக்கிறோம்..? என்ன சேவை செய்கிறோம்..? மக்களிடம் எங்கள் நிறுவனம் எப்படி தங்கள் பொருட்களை கொண்டு சேர்கின்றது..? வருடத்திற்கு எவ்வளவு லாபம் பெறுகிறது..? என்பதை காட்டி முதலீட்டாளர்களிடம் பணத்தை பெறுகிறது. பணத்தை பெற்றதற்கு சாட்சியாக, அந்த நிறுவனத்தின் பங்குகளை கொடுக்கிறது.

உதாரணத்திற்கு, ABC என்ற நிறுவனம் 500 கோடி ரூபாய் முதலீட்டில் (Market Capital) இயங்கி கொண்டிருகின்றது. இதன் மூலம் வருடத்திற்கு 100 கோடி நிகர லாபம் (Profit) சம்பாதிக்கின்றது. இப்போது, இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் நிறுவனத்தின் முதலீட்டை மேலும் 500 கோடி அதிகரிக்க திட்டமிடுகிறார். அதாவது, ஏற்கனவே உள்ள 500 கோடியுடன் கூடுதலாக 500 கோடி சேர்த்து 1000 கோடியாக உயர்த்த முடிவு செய்கிறார். அப்போது, அந்த நிறுவனத்தின் வருடாந்திர லாபமும் இரண்டு மடங்காகும். அதாவது, 500 கோடி ரூபாய் முதலீடு செய்தபோது 100 கோடியாக இருந்த அவர்களது லாபம் இப்போது, 1000 கோடி முதலீடு செய்யும் போது 200 கோடியாக மாறும்.

இந்த நிறுவனம், இப்போது வங்கிக்கு செல்லாமல், சொத்தை அடகு வைக்காமல் பங்கு சந்தைக்கு வந்து 500 கோடியை திரட்ட முடியும்.

உதாரணத்திற்கு, 500 கோடி ரூபாய் என்பதை ஒரு கோடி பங்குகளாக பிரித்து ஒரு பங்கின் விலை தலா 500 ரூபாய் என்றோ, அல்லது பத்து கோடி பங்குகளாக பிரித்து ஒரு பங்கின் விலை 50 ரூபாய் என்றோ விற்பனை செய்வார்கள். எத்தனை பங்குகள் என்பதை அந்த நிறுவனம் தான் முடிவு செய்யும். இப்போது, நீங்கள் ஒரு பங்கினை ரூபாய் 500 கொடுத்து வாங்கி விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இப்போது, அந்த நிறுவனத்தின் லாபம் எதிர்பார்த்ததை போல 100 கோடி வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.

இப்போது, அந்த பங்கின் மதிப்பும் உயர்ந்திருக்கும். உதரணமாக, 500 கோடி முதலீடு + நிகரலாபம் 100 கோடி = மொத்தம் 600 கோடி.

இந்த 600 கோடியை ஒரு கோடி பங்குகளாக பிரித்தால் ஒரு பங்கின் விலை 600 ரூபாய் என்று வரும். ஆக, நீங்கள் வாங்கிய ஒரு பங்கின் விலை 500 ரூபாயில் இருந்து. இப்போது, 600 ரூபாய்க்கு வந்திருக்கும். உங்களுக்கு ABC நிறுவனத்தின் பங்கில் 100 ரூபாய் லாபம் கிடைத்திருகின்றது.

கொஞ்சம் பொருங்க… ஒரு நிறுவனத்தின் லாப, நஷ்டம் மட்டும் தான் பங்கின் விலையை தீர்மானிக்கிறதா..? என்றால் இல்லவே இல்லை என்பது தான் விடை.

அப்படி என்றால் வேறு என்னென்ன காரணிகள் பங்கு விலையின் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம். இன்று இது போதும். ஒரே நாளில் மொத்தத்தையும் தெரிந்து கொண்டு குழம்ப வேண்டாம். அடுத்த பதிவில் வேறு என்னென்ன காரணிகள் பங்கு விலையின் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்துகின்றன என்பதை தெளிவாகவும், புதியவர்களுக்கு புரியும் வகையிலும் பதிவிடுகிறேன்.

அடுத்த பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

பதிவுகளை தவற விடமால் பார்க்க இந்த ( https://www.facebook.com/alla.alla.panam1 ) முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள். அல்லது, ( https://t.me/alla_alla_panam ) என்ற Telegram Channel-ல் இணைந்து கொள்ளலாம். அடுத்தடுத்த பதிவுகளின் லிங்குகளை நான் அவற்றில் உங்களுக்கு பகிர்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

--- Advertisement ---


mortgage, share market, finance
அள்ள அள்ள பணம்..! – பங்குச்சந்தையில் பணம் அள்ளுவது எப்படி..?


More in Share Market in Tamil

To Top