பொதுவாக உங்களுக்கு சிவராத்திரி பற்றி தெரிந்திருக்கும். ஐயனுக்கு உகந்த நாளன்று எப்படி விரதம் இருந்து ஐயனை வழிபடுகிறோமோ அது போல அம்மனுக்கு உரிய ராத்திரியாக நவராத்திரி விளங்குகிறது.
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்ற இந்த நிகழ்வில் உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் விலகி பணம் கையில் தங்கவில்லை என்று நினைப்பவர்களுக்கு அஷ்ட ஐஸ்வரியங்கள் கிடைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஒன்பது நாளும் இந்தியாவில் இருக்கும் இந்து மக்கள் இந்தப் பண்டிகையை கோலாகலமாக கோவில்கள் மட்டும் இன்றி வீடுகளிலும் கொலு வைத்து அம்மனை முழு மனதோடு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
நவராத்திரி முதல் மூன்று நாள்
வரும் அக்டோபர் 3 தேதி முதல் இந்த நவராத்திரி கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில் முதல் மூன்று நாள் வீரத்திற்கு உரிய துர்கையை வணங்கக்கூடிய நாட்களாகும். இந்த மூன்று நாட்களும் நீங்கள் துர்க்கையை உங்கள் வீட்டில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி துர்கா அஷ்டகம் சொல்லி வழிபடுவதன் மூலம் தைரியம் வீரியம் ஏற்படும்.
நவராத்திரியின் இடைப்பட்ட மூன்று நாட்கள்
நவராத்திரியின் இடைப்பட்ட மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகும். இந்த நாளில் நீங்கள் லட்சுமி தேவியை வணங்குவதின் மூலம் உங்கள் வீட்டில் செல்வம் குறைவில்லாமல் தங்கும். கையில் பணம் தங்கவில்லையே என்று நினைப்பவர்கள் லட்சுமி அஷ்டோத்திரத்தை ஜெபித்து மாலை நேரத்தில் சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியம் செய்து லட்சுமி தேவியை வழிபடுவதின் மூலம் அஷ்ட ஐஸ்வர்யங்களை பெறலாம்.
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள்
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடக்கூடிய நாட்களாக அமையும். இந்த நாளில் கல்விக்குரிய கடவுளை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் கிட்டும். எனவே பள்ளிக்குச் செல்லும் அனைவரும் இந்த நாளில் சரஸ்வதியை வணங்குவது அவர் வாழ்க்கையில் அனைத்து வகையான வித்தைகளையும் கற்று தேர்ந்த ஞானிகள் ஆக மாற சரஸ்வதி கடாட்சம் கிடைக்கும்.
நவராத்திரியின் கடைசி நாளை நாம் விஜயதசமியாக கொண்டாடுகிறோம். இந்த நாள் வித்தைகளை கற்க உரிய நாளாக கருதப்பட்டு வித்யா ஆரம்பம் செய்யப்படுவதை இன்றும் நீங்கள் பார்த்து தெரிந்து கொண்டிருக்கலாம்.
இந்த 2024 ஆம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் நுழையும் போது அம்மனின் அவதாரங்கள் பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல் அம்பாளின் பல்வேறு வடிவங்களை போற்றி வழிபட முன்னோர்கள் வகுத்துச் சென்ற வழிதான் இந்த நவராத்திரி இதை மகா நவராத்திரி என்றும் சொல்லுவார்கள்.
இந்த ஆண்டு வரும் அக்டோபர் இரண்டாம் தேதி மகாளய அமாவாசை வருகிறது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 3 தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை வருவதால் இந்த பூஜையை உங்கள் வீட்டில் சீரும் சிறப்புமாக கொண்டாடினால் அனைத்து வளங்களையும் கல்வி செல்வத்தையும் எளிதில் பெறலாம்.
இந்த நாட்களில் அம்மன் 9 வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தும் காரணத்தால் தான் ஒன்பது நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் தீமைகளை அழித்து வெற்றியை தரக்கூடிய நாளாக இந்த நாள் சித்தரிக்கப்பட்டுள்ளது இதைத்தான் வடநாட்டில் தசரா என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த ஒன்பது நாட்களும் உங்கள் வீட்டில் நீங்கள் தெய்வ வழிபாட்டை மாலை நேரத்தில் கொலு வைத்தோ அல்லது வைக்காமலோ கொண்டாடுவதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் தொலைந்து உங்கள் எண்ணத்திலும் நேர்மறை ஆற்றல் அதிகரித்து வாழ்க்கை செழிப்படையும்.
அதுமட்டுமல்லாமல் மனிதனை ஆட்டி படைக்கும் நவகிரகங்களின் தாக்குதல் இந்த பூஜையை செய்வதின் மூலம் அதன் தாக்கம் குறைந்து ஒன்பது கிரகங்களும் மனிதனுக்கு நன்மை அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.