பட்டிமன்றம், திருக்குறள் போன்ற பெயர்களை கேட்டாலே நம் நினைவுக்கு முதலில் வரக்கூடிய பெயர் சாலமன் பாப்பையா.
பட்டிமன்ற பேச்சாளராகவும், பேராசிரியராகவும் பிரபலமாக அறியப்படும் இவர் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இவருடைய மனைவி ஜெயா பாய் நேற்று (12-01-2025) காலமானார். 88 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்திருக்கிறார்.
சாலமன் பாப்பையா – ஜெயா பாய் தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். மதுரையில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு அமைச்சர்கள் தியாகராஜன், எம்எல்ஏ தாம்ப்ராஸ் மாநில துணைத்தலைவர் இல.அமுதன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மட்டுமில்லாமல் ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று மாலை இறுதி ஊர்வலம் நடைபெற்ற நிலையில் தத்தனேரி கல்லறை தோட்டத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.