நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது படம் ஆரம்பித்த முதல் 15 நிமிடம் கதை எதை நோக்கி பிரயாணப்படுகிறது என்ற ஏதோ ஒரு புரிதலும் இல்லாமல் இருக்கிறது.
ஆனால் 15 நிமிடம் கழித்து கதை வேகம் எடுக்கிறது கதையுண் சேர்ந்து பயணிக்கும் அனுபவத்தை திரைக்கதையின் மூலம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். இவர் இயக்கிய ஜெய்பீம் திரைப்படத்தில் காவல்துறையினரின் வன்முறையான பக்கத்தை காட்டி இருந்தார்.
இந்த திரைப்படத்தில் அந்த வன்முறை சரி என்ற புரிதலில் ஆரம்பித்து, அந்த வன்முறை தீர்வாகாது என்பதை உண்மைக்கு நெருக்கமாக காட்டியிருக்கிறார். இதனை சமகாலத்தில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கள் அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட என்கவுண்டர்களுடன் தொடர்பு படுத்தி பார்க்க முடிகிறது.
சின்ன சின்ன லாஜிக் மீறல்கள். அவ்வப்போது திரைக்கதையில் ஏற்படும் தொய்வு ஆகியவை படத்தின் குறைகளாக கூறினாலும். ஒட்டுமொத்தமாக வேட்டையன் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றிருக்கிறது.
பெரிய பிரமோஷன் எதுவும் இல்லாமல் பெரிய கொண்டாட்டம் எதுவும் இல்லாமல் வெளியாகி உள்ள வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனத்தை பெற்று இருப்பது அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்திற்கான புக்கிங் மற்றும் வசூலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் எமோஷனல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் அற்புதமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இரண்டாம் பாதியில் படம் படு ஸ்பீடாக பயணித்து நேரம் போனதே தெரியாத ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறது.
கூடுதலாக இந்த படத்தில் அறிமுக பாடலை தவிர வேறு எந்த பாடலும் இல்லாமல் இருப்பது திரைக்கதையின் வேகத்திற்கு வலு சேர்த்துள்ளது. படத்தில் காமெடிக்கு என தனி ட்ராக் இல்லாத குறையை நடிகர் பகத் பாசில் தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் சரி செய்து இருக்கிறார்.
இந்த படத்தின் மூலம் நடிகர் பகத் பாஸிலுக்கு இன்னும் ஒரு உயரம் கிடைத்திருக்கிறது என்று மறுக்காமல் சொல்லலாம். வழக்கம் போல தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார் நடிகர் பகத் பாஸில்.
மட்டுமில்லாமல் நடிகை துசாரா விஜயன் முந்தைய படங்களை போல அல்லாமல் இந்த படத்தில் கதாபாத்திரத்திற்கு நெருக்கமாக, வாழ்வியலுக்கு நெருக்கமாக, உண்மைக்கு நெருக்கமாக சென்று தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது.
படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதையின் வேகத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் வேட்டையின் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்பதே உண்மை. ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய ஒரு அருமையான படம் வேட்டையன் என்பதில் அந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.
ஆனாலும் இன்று அதிகாலை முதலே டுவிட்டர் பக்கத்தில் வேட்டையன் படம் மீதான தாக்குதலை பார்க்க முடிகிறது என்ன விவரம் என்று உள்ளே தேடிப் பார்த்தால் அந்த காக்கை கழுகு பிரச்சனை தற்போது வரை நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் வம்படியாக வேட்டையன் திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை எழுதிக் கொண்டிருக்கின்றனர் என்பதை பார்க்க முடிகிறது. படத்தில் கழுகு பறக்குதுன்னா அங்க இறைங்க அதிகமா இருக்குன்னு அர்த்தம் என்ற வசனத்தில் கழுகு என்ற வார்த்தையை ம்யூட் செய்திருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேவையற்ற சர்ச்சை உருவாவதை தடுக்கவே படக்குழு கழுகு என்ற வார்த்தயை ம்யூட் செய்திருக்கலாம் என தெரிகிறது.