70 வயதை கடந்த பிறகும் கூட இப்பொழுதும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதில் ராஜாவாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த்:
தனது மார்க்கெட்டை எந்த காலத்திலும் யாரும் பிரிக்க முடியாது என்கிற அளவில் சூப்பர் ஸ்டார் பெரும் உயரத்தை தொட்டிருக்கிறார். இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்து ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.
இதற்கு நடுவே நேற்று திடீரென்று அவருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டது. அவருடைய வயிற்றில் வலி ஏற்பட்டதாகவும் மேலும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த்.
மருத்துவமனையில் ரஜினிகாந்த்
அவருக்கு இன்று காலை 11 மணி அளவில் சிகிச்சைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவருடைய ரத்த குழாய்களில் சில பிரச்சனைகள் இருந்ததாகவும் அதனால் ஆஞ்சியோ சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ரஜினி நல்ல உடல் நிலையுடன்தான் இருக்கிறார் என்று அவர்கள் உறுதி செய்தனர். இந்த நிலையில் இது குறித்து தற்சமயம் நடிகர் விஜய் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
விஜய் சொன்னது:
அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் பூரண உடல்நலத்துடன் திரும்பவும் வீடு திரும்ப வேண்டும் என்று நான் உளமாற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என விஜய் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் நாளைக்குள் அவள் ஐசியூ வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விடுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன ஆனால் இந்த ஒரு நாளிலேயே ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலரும் இது குறித்து அதிக கவலைக்கு உள்ளாகி விட்டனர்.
ஏனெனில் அதிக வயதாகியும் கூட ரஜினிகாந்த் தொடர்ந்து நடித்து வருவது என்பது ரஜினி ரசிகர்களுக்கே கொஞ்சம் கவலையை கொடுக்கும் விஷயமாக தான் இருந்து வருகிறது. தலைவர் இனிமேல் நடிக்க வேண்டாம் என்று ரசிகர்கள் சிலரே கூறி வந்தாலும் கூட ரஜினிகாந்த் தொடர்ந்து நடித்துக் கொண்டே தான் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் உடல்நிலை கருதி கூலி மற்றும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தாமதமாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.