நடிகர் விஜயகாந்த், கடந்த மாதம் 28ம் தேதி காலை உடல்நலக்குறைவால் காலமானார். 29ம் தேதி மாலை அவரது உடல், கோயம்பேடு தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பலரும் அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது நினைவிடத்தில் தினமும் மதியம் அன்னதானம் வழங ்க தேமுதிக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே விஜயகாந்த் இறப்பதற்கு முன் அவர் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அதில் விஜயகாந்த், பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய் மார்களே, அன்புள்ளம் கொண்ட தமிழ் நெஞ்சங்களே என்று பேசியுள்ளார்.
எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. 4 தொகுதிகளிலும், கூட்டணியில் இருக்கிற 40 தொகுதிகளிலும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். லஞ்சம் இல்லாத ஆட்சி யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான வழியில் தமிழகத்தை மக்களோடு இணைந்து உருவாக்குவோம் என, அந்த வீடியோக்களில் விஜயகாந்த் பேசி இருக்கிறார்.
விஜயகாந்த் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் இந்த வீடியோக்களில் விஜயகாந்த் பேசியிருக்கிறார். அதாவது நினைவாற்றலை சுத்தமாக இழப்பதற்கு முன், அவர் சற்று சிரமத்துடன்தான் இந்த வீடியோக்களில் பேசியிருக்கிறார்.
சினிமாவிலும் சரி, அரசியல் மேடைகளிலும் சரி அவர் பேசிய தொனியும், கம்பீரமும், அந்த வார்த்தைகளில் இருந்த உண்மைகளும்தான் அவரது மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாக தேமுதிகவின் ஓட்டுகளாக மாறியது. ஆனால், கடைசியில் அவர் பேசாத ஒரு நிலையில் வாழ்ந்து மறைந்துவிட்டார்.