நடிகர் கவுண்டமணியை நினைத்தால், செந்திலை நினைக்காமல் இருக்க முடியாது. அதே போல் செந்திலை நினைத்தால் நடிகர் கவுண்டமணியை நினைக்காமல் இருக்க முடியாது.
ஏனெனில் இந்த நகைச்சுவை மன்னர்கள், தமிழ் சினிமாவில் தங்களுக்கு என ஒரு தனி நகைச்சுவை ராஜ்ஜியத்தை நடத்தி காட்டி விட்டனர்.
நூற்றுக்கணக்கான படங்களில் கவுண்டமணி – செந்தில் ஜோடியின் காமெடி தர்பார், தமிழக மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. இப்போதும் அவர்கள் நடித்த காமெடி காட்சிகளை பார்த்து, ரசித்து சிரிக்க முடியும்.
குறிப்பாக வைதேகி காத்திருந்தாள் படத்தில், இது எப்படிண்ணே பளிச்சின்னு எரியும் என, மேண்டில் பல்ப்பை உடைப்பது, அடேய் கோமுட்டி தலையா என கவுண்டமணி கிண்டலாக கூப்பிடுவது என அவர்கள் அழிச்சாட்டியமே வேற லெவல்தான்.
நடிகர் செந்தில்
நடிகர், இயக்குநர் கே பாக்யராஜ் இயக்கிய பொய் சாட்சி படத்தில் முதல் முறையாக செந்தில் அறிமுகமானார். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு செந்திலை சிக்க வைத்துவிட்டு தப்பிச் சென்று விடுவார் பாக்யராஜ்.
முதல் படத்தில், முதல் சீனில் அடிவாங்குவது போன்ற அந்த காட்சியில் நடித்ததால், சென்டிமென்டாக அதுவே கவுண்டமணியிடம் அடிவாங்கும் கேரக்டராக தன் சினிமா பயணத்தில் இருந்திருக்கிறார் செந்தில்.
கடந்த 1980, 90களில் கவுண்டமணி செந்தில் இருக்கிறார்களா என சினிமா போஸ்டரை பார்த்துவிட்டு தியேட்டர்களுக்கு சென்ற ரசிகர் கூட்டம் அதிகம்.
அதுவும் கங்கை அமரன் டைரக்ஷன், இளையராஜா இசை, ராமராஜன் கதாநாயகன், கவுண்டமணி செந்தில் காமெடி என்றால், அந்த படம் சூப்பர்ஹிட்தான்.
கவுண்டமணி – செந்தில்
இந்த கூட்டணிக்கு, தமிழக மக்கள் மத்தியில் எப்போதுமே அமோக வரவேற்புதான். இதை பல படங்கள் நிரூபித்து இருக்கின்றன.
முதுமை காரணமாக நடிகர் செந்தில், நடிகர் கவுண்டமணி இருவருமே நடிப்பதை குறைத்துக்கொண்டனர்.
கவுண்டமணி படத்தில் செந்திலை கண்டபடி, திட்டி உதைத்தாலும் நிஜத்தில் கவுண்டமணிக்கு செந்தில் மீது நிறைய பிரியம் இருக்கிறது.
ஒருமுறை உடல் நலமின்றி கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்திலை, முதலில் வந்து பார்த்தது கவுண்டமணிதான்.
கவுண்டமணிக்காக பெரிய ஸ்டார் நடிகர்களே காத்திருந்த நிலையில், செந்தில் வருகைக்காக காத்திருந்தவர் கவுண்டமணி.
என்னண்ணே நீங்க போய் செந்திலுக்காக காத்திருக்கலாமா என யாராவது கேட்டால், அவன் வளர்கிற பையன். ஷூட்டிங்கில பிஸியா இருப்பான். அவன் வரட்டுமே, என்ன இப்போ என்று கோபமாக கேப்பாராம் கவுண்டமணி.
மறக்க வேண்டிய விஷயம்…
இந்நிலையில், நடிகர் செந்தில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நான் மறக்க வேண்டும் என்று நினைக்கிற விஷயம் என்ன என்று கேட்டால் அது என்னுடைய ஆணவத்தை தான் கூறுவேன். ஆரம்பத்தில் நான் ஒரு நடிகன் என்ற ஆணவம் நினைப்பில் இருந்தது உண்மைதான்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல வாழ்க்கையின் பல படிநிலைகள் எனக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுத்தது. அதன் பிறகு நானும் ஒரு சாதாரண மனிதன் தான்.
எல்லோரும் போல நானும் ஒரு சாதாரண மனிதன்தான் என்பதை உணர்ந்து கொண்டேன்.
நான் மறக்கவே கூடாது என்று நினைக்கக்கூடிய விஷயம் என்ன என்று கேட்டால்.. என்னுடைய நண்பர்களை கூறுவேன். என்னுடைய நண்பர்கள் தான் எனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறார்கள்.
சொத்து பணம் இதெல்லாம் இருந்தாலும் நல்ல நண்பர்கள் இல்லை என்றால் அந்த மனிதன் ஏழை தான். நல்ல நண்பர்கள் வைத்திருக்கக்கூடிய ஒரு மனிதனை பணக்காரன் என்று கூறலாம்.
நண்பர்களை மறக்க கூடாது
அந்த வகையில் என்னுடைய வெற்றி தோல்விகள் சுக துக்கங்களில் என்னுடன் இருக்கும் நண்பர்களை நான் எப்போதும் மறக்க கூடாது என்று நினைக்கிறேன் என நடிகர் செந்தில் கூறியிருக்கிறார்.
காமெடி நடிகரான செந்தில், இப்படி சென்டிமெண்டாக பேசியிருப்பது, தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
அதுவும் வாழ்க்கையில் மறக்கிற விஷயமாக என்னுடைய ஆணவத்தை நினைக்கிறேன், என்று கண்ணீருடன் அவர் கூறியிருப்பது, அவரது வாழ்க்கை அனுபவத்தை காட்டுகிறது.