நடிகர் செந்தில் திரையில் வந்தாலே பலருக்கு சிரிப்பு வந்துவிடும். பொய்சாட்சி படத்தில், அவரை முதல் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே. பாக்யராஜ்தான். இவர்தான், இயக்குநர் பாரதிராஜாவை வற்புறுத்தி, 16 வயதினிலே படத்தில் நடிக்க கவுண்டமணிக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.
அப்படி கவுண்டமணி, செந்தில் இருவரது சினிமா பயணத்துக்கும் காரணமே கே. பாக்யராஜ்தான் என்றால் அது பொய்யல்ல. கவுண்டமணி, செந்தில் ஜோடி சேர்ந்துவிட்டாலே, அந்த காமெடி காட்சி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடும். அப்படிதான் பல படங்களில் அவர்களது காமெடி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று, 35 ஆண்டுகளுக்கு மேல் இருவரையும் ஒன்றாக நடிக்க வைத்தது.
ராமநாதபுரத்தை சேர்ந்த நடிகர் செந்தில் பிறந்தது 1951ல். இப்போது 72 வயதுக்கு மேலாகி விட்டது. மனைவி பெயர் கலைச்செல்வி. மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் மணிகண்ட பிரபு டாக்டராக உள்ளார். ஹேமச்சந்திர பிரபு சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
துவக்கத்தில் ஓட்டலில் வெயிட்டராகவும், பின் மதுப்பானக்கடையிலும் வேலை செய்த செந்தில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் வாங்கிய சம்பளம் சில நூறுகள்தான். அடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கினார். அடுத்து அவர் பெற்ற சம்பளம் ஒரு படத்துக்கு ரூ. 25 லட்சமாக இருந்தது.
சென்னையில் ரூ. 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொந்த வீடு இருக்கிறது. ஆடி ஏ7, ஸ்கோடா, இன்னோவா போன்ற சொந்த கார்கள் வைத்திருக்கிறார். சினிமா மூலம் அவர் சம்பாதித்த வகையில் அவரது சொத்துகள் மதிப்பீடு ரூ. 50 கோடி வரை இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. முதுமை காரணமாக, செந்திலும் கவுண்டமணியை போலவே நடிப்பதை குறைத்துக்கொண்டார்.