மறதி என்பது ஒரு தேசிய வியாதி என்று உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில் கமல்ஹாசன் ஒரு காட்சியில் வசனம் பேசியிருப்பார். அது யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெகுவாக பொருந்தும் என்று தான் சொல்ல தோன்றுகிறது.
ஏனெனில் ஒரு நடிகை, ஒரு படத்தில் கதாநாயகனுக்கு ஜோடியாக நடிக்கிறார். அடுத்த படத்தில் அவரே அம்மாவாக நடிக்கிறார். மற்றொரு இடத்தில் அவருக்கு அக்காவாக நடிக்கிறார். வேறொரு படத்தில் அவருக்கு அண்ணியாக நடிக்கிறார்.
பல உறவு முறைகளில்…
இப்படி ஒரே நடிகருக்கு அவர் பல உறவு முறைகளில் நடிக்கிறார். ஆனால் படம் பார்க்கும் ரசிகர்கள், தங்களது மறதி காரணமாக மகளாக நடித்த நடிகையை ஜோடியாகவும் ஏற்றுக்கொள்கின்றனர். ஜோடியாக நடித்தவரை அண்ணியாகவும், அண்ணியாக நடித்த நடிகையை தங்கையாகவும், தங்கையாக நடித்தவரை காதலியாகவும் அடுத்தடுத்த படங்களில் பார்த்து ஏற்றுக் கொள்கின்றனர்.
அதே நேரத்தில் அந்த படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெறுகிறது. அப்படிப்பட்ட சில நடிகர், நடிகைகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
பிரகாஷ் ராஜ் – திரிஷா
கில்லி படத்தில் முத்துப்பாண்டி கேரக்டரில் பிரகாஷ்ராஜ், முறை பெண்ணாக திரிஷா நடித்திருப்பார். அவரை திருமணம் செய்ய பிரகாஷ்ராஜ் செல்லம் ஐ லவ் யூ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு அதே பிரகாஷ்ராஜூக்கு மகளாக, திரிஷா அபியும் நானும் என்ற படத்தில் நடித்திருந்தார்.
ரகுவரன் – ராதிகா
ராணி மகாராணி என்ற படத்தில், ரகுவரனுக்கு ராதிகா மனைவியாக நடித்திருப்பார். அடுத்த சில ஆண்டுகள் கழித்து எடுத்த உயிரிலே கலந்தது என்ற படத்தில், ரகுவரனுக்கு ராதிகா அம்மாவாக நடித்திருந்தார்.
கரண் – குஷ்பூ
துள்ளித் திரிந்த காலம் என்ற படத்தில், நடிகர் கரணுக்கு குஷ்பூ அக்காவாக நடித்திருப்பார். கலர் கனவுகள் என்ற படத்தில் கரணுக்கு குஷ்பூ மனைவியாக நடித்திருப்பார். அதன் பிறகு கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்ற படத்தில் கரணுக்கு குஷ்பு அண்ணியாகவும் நடித்திருப்பார்.
கரண் – சிம்ரன்
கண்ணெதிரே தோன்றினாள் என்ற படத்தில் கரணுக்கு, சிம்ரன் தங்கையாக நடித்திருப்பார். அடுத்து கண்ணுபடப் போகுதய்யா என்ற படத்தில் சிம்ரன் கரணுக்கு மனைவியாக நடித்திருப்பார்.
இப்படி தமிழ் சினிமாவில் பல நடிகர்கள், நடிகைகள் உறவு முறைகளில் மாறி மாறி நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு உதாரணமாக அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீ வித்யா, மனிதன் படத்தில் ரஜினிக்கு அக்காவாக நடித்திருப்பார்.
வயதான நடிகைகள்
நடிகர்கள் ஹீரோக்களாக இருக்கும் போது இளம் கதாநாயகிகளாக அவர்களுடன் ஜோடியாக நடிக்கும் சில பல நடிகைகள் ஒரு கட்டத்தில் முதிர்ச்சியடைந்து அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களுக்கு மாறிவிடுகின்றனர்.
விக் வைத்த ஹீரோக்கள்
ஆனால் ஹீரோக்கள் மட்டும் விக் வைத்துக்கொண்டு 70 வயதிலும் ஹீரோவாக நடித்து கெத்து காட்டுகின்றனர். இதையே முத்தின கத்திரிக்கா படத்தில், தன்னுடன் படித்த தனது காதலி கிரண் மகள் பூனம் பாஜ்வாலை திருமணம் செய்வது போல, சுந்தர் சி நடித்திருப்பார். அதனால் ஹீரோக்கள் வயதானாலும் ஹீரோக்கள்தான். ஆனால் நடிகைகள் ஒரு கட்டத்தில் வயதில் மூத்த கேரக்டர்களுக்கு மாறி விடுகின்றனர்.
என்ன கொடுமை சார் இது?
ஆனால் ஒரே நடிகருடன் பல உறவு முறையில் நடித்த நடிகைகளை பார்க்கும் போது, என்ன கொடுமை சார் இது என்ற டயலாக் தான் வாயில் வருகிறது.