தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுக்கூட்டம் நடத்தியும் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, தனது வாழ்நாளில் 65 ஆண்டுகாலம் சினிமாத்துறையிலும் பல படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. அதாவது கடந்த 1946ல் ராஜகுமாரி படத்தில் துவங்கி, 2011ல் பொன்னர் சங்கர் வரை படங்களுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி.
எனவே தமிழ் சினிமாத் துறை சார்பில் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, இயக்குநர்கள் சங்கம் என 5 அமைப்புகள் சேர்ந்து, கலைஞர் 100 விழா என்று, கடந்த 6ம் தேதி, சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் நடத்தியது. மிக பிரமாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விழாவில் கலந்துக்கொண்டவர்கள் எண்ணிக்கை 700 பேரை கூட தாண்டவில்லை என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.
இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ் போன்ற ஸ்டார் நடிகர்கள் கலந்துக்கொண்டும், விழா சோபிக்கவில்லை. விழாவுக்கு வந்த நயன்தாரா, சத்யராஜ், டி ராஜேந்தர் உள்ளிட்ட சில முக்கிய நடிகர், நடிகைகளும், தங்களை யாருமே கண்டுகொள்ளாததால் விரக்தியில், பாதியிலேயே கிளம்பி போய்விட்டனர். ரஜினி, கமல் போன்ற டாப் ஸ்டார் நடிகர்கள், மேடையில் இருந்து காலி சேர்களை பார்த்தபடி தங்கள் வாழ்வில் முதன்முறையாக பேசிய மோசமான அனுபவத்தை இந்த விழாதான் தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விழா குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, எந்தவிதமான ஒருங்கிணைப்பும், திட்டமிடலும் இல்லாமல் நடத்தப்பட்ட சொதப்பலான ஒரு விழா இதுதான். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமநாதன் போன்றவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். விழாவுக்கு வரும் முக்கிய நடிகர், நடிகைகளின் பெயர்களை அழைப்பிதழில் போட வேண்டும். கட் அவுட்களில் அவர்களது புகைப்படங்களை வைக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் விழா நடத்துகின்றனர்.
இந்த விழாவை டெலிகாஸ்ட் செய்ய, கலைஞர் டிவிக்கு ஒளிபரப்பு உரிமம் கொடுத்ததால், பத்திரிகையாளர்களை விழாவுக்கும் அழைக்கவில்லை. பிரஸ்மீட்டும் தரவில்லை. அதனால் இந்த விழா குறித்த தகவல்களும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்லை. அதனால் விழாவை மக்கள் புறக்கணித்து விட்டனர்.
கலைஞர் டிவியில் இருந்து நிகழ்ச்சி ஒளிபரப்புக்காக 10 கோடி ரூபாய், விளம்பர ஸ்பான்சர்கள் தரப்பில் 4 கோடி ரூபாய் என, விழாவை ஏற்பாடு செய்து நடத்திய தயாரிப்பாளர் சங்கத்துக்கு 14 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. அந்த 14 கோடி ரூபாயையும் தயாரிப்பாளர் சங்கம் ஆட்டையை போட்டு விட்டது. இனி கேட்டால், பல கோடிகளுக்கு பொய் கணக்கு காட்டுவார்கள், என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.