தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தமுறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கட்சிகளுக்கிடையே போட்டி நிலவி வரும் நிலையில் ஜெயிக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு மக்களிடத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க ஊடகங்களும், தனியார் அமைப்புகளும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன் படி அப்டேட் நியூஸ் 360 நிறுவனம் தொகுதி வாரியாக நடத்திய சமீபத்திய களஆய்வின் அடிப்படையில் தமிழக சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 127 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று அப்டேட் நியூஸ் 360 நிறுவனம் நடத்திய கருத்து கனிப்புகள் தெரிவிக்கின்றன.
தி.மு.க கூட்டணி 96 இடங்களை பெறும் என்றும் 11 தொகுதிகள் இழுபறியாக இருப்பதாகவும் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தில் நடைபெற்றுள்ள திட்டங்களும் தொண்டை மண்டலத்தில் கூட்டணி கட்சிகளின் பலமும் அ.தி.மு.க கூட்டணி ஆட்சி அமைக்க உதவியுள்ளதாக சர்வே தெரிவிக்கிறது.
சர்வே முடிவுகள் மண்டலங்கள் வாரியாக தற்போது வெளியிட்டப்பட்டுள்ளது. இதன்படி, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க கூட்டணி 45 இடங்களிலும் தி.மு.க கூட்டணி 21 இடங்களை கைப்பற்றும் என்றும், தொண்டை மண்டலத்தில் அதாவது தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் சென்னை உள்ளிட்ட இடங்களில் 38 தொகுதிகளை அ.தி.மு.க கூட்டணியும் 39 இடங்களை தி.மு.க கூட்டணியும் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட சோழ மண்டலத்தில் அ.தி.மு.க கூட்டணி 15 இடங்களையும் தி.மு.க கூட்டணி 21 இடங்களையும் கைப்பற்றும் என்றும் அதே சமயம் தமிழகத்தின் தென் மாவட்டங்களான பாண்டிய மண்டலத்தில் அ.தி.மு.க கூட்டணி 29 இடங்களையும் தி.மு.க கூட்டணி 15இடங்களையும் கைப்பற்றும் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
மொத்தமாக அ.தி.மு.க 127 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. தி.மு.க தென் தமிழக மாவட்டங்களில் அதிக தொகுதிகளை பெற்று 96 இடங்களை கைப்பற்றும் என்றும் இந்த சர்வே தெரிவிக்கிறது.
பயிர் கடன் தள்ளுபடி
கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் விவசாயியாக பார்ப்பதும் அ.தி.மு.க கூட்டணிக்கு அதிக வாக்குகளை பெற்று தருவதாக அமைந்துள்ளது. அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்ட 1000 ரூபாய் நிவாரண உதவித் தொகை, நூறு நாள் வேலை திட்டத்தின் நாட்கள் அதிகரித்தது ஆகியவை மக்களால் பெரிதும் பராட்டப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி.. மாத பட்ஜெட்டில் 2500 ரூபாய் மிச்சம் சாமி..
அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை, வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள், விலையில்லா கேபிள் TV என இந்த மூன்றும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் 2500 ரூபாய் வரை மிச்சப்படுத்தும். இது ஒவ்வொரு குடும்பத்துடைய பொருளாதார சூழ்நிலையையும் சற்றே உயர்த்தும் என வெகுஜன மக்கள் கூறுகிறார்கள்.
கோட்டையை நிர்மாணிக்கும் கொங்கு பெல்ட்
தமிழக சட்ட மன்ற தேர்தல் வரலாற்றில் கோட்டையை யார் பிடிப்பது என முடிவு செய்வதில் கொங்கு பெல்ட் வாக்களர்களுக்கு பெரிய பங்கு உண்டு. இந்த கொங்கு மண்டலத்தில் எந்த கட்சி அதிக இடங்களை பிடிக்கிறதோ எந்த கட்சியே ஆட்சியை பிடிக்கும் அந்தஸ்தை பெற்று வருகின்றது என்பது வரலாறு.
அந்த வகையில், வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு மற்றும் தேவேந்திரகுலவேளார் என்ற பெயர் மாற்றம் ஆகியவை கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க கூட்டணி 45 இடங்களை கைப்பற்றி கோட்டையை மீண்டும் பிடிக்கும் வாய்ப்பை பெற்று தந்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது.
ஆளுமை மிக்க எடப்பாடி
சர்வேயின் போது கேட்கப்பட்ட கேள்விகளில் பொதுமக்கள், ஜெயலலிதா இறந்த சமயம், கொரோனா தொற்று சமயத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புதிய வேலை வாய்புகளை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை பாராட்டி கருத்துகளை தெரிவித்துள்ளனர். இது அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் வெற்றி வாகை சூட வழி ஏற்படுத்தி தந்துள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றது.
கெத்து காட்டும் திமுக
கலைஞர் கருணாநிதி இல்லாமல் தி.மு.க சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்றாலும் தி.மு.கவிற்கான நிரந்தர வாக்கு வங்கிக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பது பலமாக அமைந்துள்ளது. திமுக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக கடுமையான போட்டியை சந்தித்து மீள வேண்டும். இந்த விஷயத்தில் திமுக கெத்து காட்டுகின்றது.
ஆப்பு வைக்கும் திமுக கூட்டணிகட்சிகள்
நாடாளுமன்ற தேர்தல் போல் இல்லாமல் தற்போது தி.மு.க கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளில் தோல்விகளை சந்திக்கும் நிலை உள்ளது. இது தி.மு.க ஆட்சியை பிடிக்க முடியாமல் போவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வரவு தி.மு.க கூட்டணியின் வாக்குகளை வெகுவாக பாதிப்படைய செய்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை தி.மு.கவிற்கு செல்லாமல் மக்கள் நீதி மய்யத்திற்கு செல்கிறது. இது தவிர தி.மு.கவின் நிரந்த வாக்கு வங்கியின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பறித்துள்ளதை இந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு முந்தைய இந்த கருத்து கணிப்பு அ.தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் அ.தி.மு.க கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதில் முன்னிலையில் உள்ளதை சுட்டிக் காட்டுகிறது.