தென்னிந்தியா முழுக்க அனைத்து மொழி மக்களாலும் கொண்டாடப்படும் நடிகைகள் மிகவும் குறைவு. அந்த வகையில் சாவித்ரிக்கு அடுத்து தென்னிந்தியா முழுக்க சூப்பர் ஹிட் நாயகியக லைக்ஸ் அள்ளியவர் செளந்தர்யா.
கர்நாடகாவில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிப்படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகையாகக் கொண்டாடப்பட்டவர். கரியரின் உச்சத்தில் இருந்தபோதே திடீரென இதே ஏப்ரல் 17-ம் தேதி 2004-ம் ஆண்டு விமான விபத்தில் மரணமடைந்தார்.
அப்போது அவருக்கு வயது வெறும் 31. அவர் இறந்து 16 ஆண்டுகள் ஆனாலும் செளந்தர்யாவின் நினைவு அவர் ரசிகர்களைவிட்டு அகலவில்லை. செளந்தர்யாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும், செளந்தர்யாவின் வழிகாட்டியாக விளங்கியவர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆவார்.
ஒரு விழா மேடையில் பேசிய அவர் சௌந்தர்யாவுடனான கடைசி போன் உரையாடலை பகிர்ந்து கொண்டார். சௌந்தர்யா இறப்பதற்கு முந்தைய நாள் இரவு தான் அவருடன் பேசினேன்.
அப்போது, நான் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன். அநேகமாக நான் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் தான் என்னுடைய கடைசி படமாக இருக்கும் என கூறினார். மேலும், உங்களிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன். நான் இப்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறேன்’ என்று என்னிடமும், என் மனைவியிடமும் மாலை ஏழரை மணிமுதல் எட்டரை மணி வரை ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
நாளை, பி.ஜே.பி கட்சிக்காக பிரச்சாரத்துக்கு செல்வதாகக் கூறினார். அதன்பின் மறுநாள் காலை ஏழரை மணிக்கு டிவி பார்த்தபோது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. அவர் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தாய் பார்த்து. அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியவில்லை.
திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. கடைசியில் அவர் இறப்புக்குதான் அவர் வீட்டுக்குச் செல்ல முடிந்தது. மிக பிரம்மாண்டமாக வீடு கட்டியிருந்தார். உள்ளே சென்றபோது எனது படத்தை பெரிதாக ஃபிரேம் போட்டு மாட்டியிருந்தார். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.
அப்படிப்பட்ட நடிகை சௌந்தர்யா. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் சினிமா அருமையான ஒரே குடும்பம் போன்ற உணர்வுள்ள தொழில். இதில் நம்மை அறியாமல் நமக்கு சொந்த பந்தங்கள் உருவாகிவிடும்” என்றார்.