வரும் பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. ஏலியன் பொம்மையை வைத்து எடுத்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நேற்று நாளை என்ற டைம் டிராவல் படத்தை இயக்கிய ரவிக்குமார் டைரக்ட் செய்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில், இன்று நேற்று நாளை என்ற சயன்டிபிக் கதையை மிக எளிதாக, பாமர ரசிகர்களும் புரிந்துக்கொள்ளும் விதமாக, மிக எளிய திரைக்கதையில் மிக அழகாக இயக்கி இருந்தார் இயக்குநர் ரவிக்குமார். ஒரு அறிவியல் கதையை இந்தளவுக்கு சிறப்பாக திரைக்கதையில் சொல்ல முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியதால், இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிறது.
இந்நிலையில் அயலான் பட பிரமோசனுக்கு தொடர்ந்து சிவகார்த்திகேயன் பல சேனல்களில் நேர்காணல் தந்து வருகிறார். குறிப்பாக யூடியூப் சேனல்கள் எதில் பார்த்தாலும் கடந்த 10 நாட்களாக சிவகார்த்திகேயன் பங்கேற்கும் நேர்காணல்கள் பரபரப்பாக, டிரண்டிங் ஆக இருந்து வருகின்றன. இது எஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன், இசையமைப்பாளர் டி இமான் அளித்த நேர்காணல் ஒன்றில், நடிகர் சிவகார்த்திகேயனை, என் குடும்பத்தில் ஒருவராக நினைத்து பழகினேன். ஆனால், அவர் எனக்கு வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ஒரு பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என்று கூறியிருந்தார். அது சோஷியல் மீடியாவில் பரபரப்பாகி பயங்கரமாக வைரலானது.
ஆனால் இப்போது சிவகார்த்திகேயனை நேர்காணல் செய்யும்போது யாருமே அதுகுறித்து கேள்வி கேட்பதும் இல்லை. எஸ்கேவும் அதுபற்றி பேசவில்லை. இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறுகையில், இமான் விவகாரம் குறித்து எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்ற முக்கிய கண்டிசனுக்கு பிறகுதான், அவர்கள் சிவகார்த்திகேயனை நேர்காணல் செய்யவே அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் அதுபற்றி அவர்கள் கேள்வி எழுப்ப வாய்ப்பே இல்லை. அதற்காக, அவர் செய்த துரோகம் இல்லை என்று ஆகி விடாது என, கூறியிருக்கிறார்.