தமிழில் கலகலப்பான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகி வரும் திரைப்படம் தி கோட். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் இருந்து வருகிறது.
படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் விஜய். இன்னும் சிலர் இந்த திரைப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிப்பதாக கூறி வருகின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவும் விஜய்யும் இணையும் திரைப்படமாக கோட் திரைப்படம் இருக்கிறது.
யுவனின் அடுத்தப்பாடல்:
இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடலானது வெளியான போது ரசிகர்களுக்கு அது பெரும் இசை விருந்தாக அமையவில்லை. மாறாக கலவையான விமர்சனங்களை தான் பெற்றது விசில் போடு பாடல்.
தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தனது இரண்டாவது பாடலில் நல்ல விமர்சனத்தை பெற்று விட வேண்டும் என்று இரண்டாவதாக மெலோடி பாடலை வெளியிட்டார். விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 22 ஆம் தேதி இந்த பாடல் வெளியானது.
சின்ன சின்ன கண்கள் என தொடங்கும் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாடல் முழுக்க சினேகா விஜய் மற்றும் விஜயின் மகன் என்று மூவரை மட்டுமே கொண்டு பாடல் சென்றது. இந்த மெலோடி பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார்.
பவதாரணியின் குரல்:
இதற்கு பெண் குரலாக மறைந்த பாடகி பவதாரனியின் குரலை ஏ.ஐ முறை மூலம் கொண்டு வந்திருந்தனர். இந்த பாடல் தற்சமயம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கான வரிகளை வைரமுத்துவின் மகனான கபிலன் வைரமுத்து எழுதியிருந்தார்.
இந்த நிலையில் இளையராஜாவும் வைரமுத்துவும் பல காலங்களாக சண்டை போட்டு வருவது பலரும் அறிந்த விஷயமே. ஒரு காலத்தில் இளையராஜா பாரதிராஜா வைரமுத்து மூவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்.
ஆனால் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மூவருமே பிரிந்தனர். பிறகு இளையராஜாவும் பாரதிராஜாவும் ஒன்று சேர்ந்த பிறகும் கூட இன்னமும் வைரமுத்து மட்டும் இளையராஜாவுடன் சண்டையிலேயே இருக்கிறார்.
அடுத்த தலைமுறை நண்பர்கள்:
இந்த நிலையில இவர்கள் இருவரின் அடுத்த தலைமுறைகளான கபிலன் வைரமுத்தவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து ஒன்றாக பணியாற்றி இருப்பது அதிக பிரபலமாகி வருகிறது. மேலும் இந்த பாடல் குறித்து பேசிய வைரமுத்து பாடல் மிகவும் நல்லாயிருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு இனிமையான பாடலை கேட்பது மகிழ்ச்சியாக இருக்கு என்று கபிலன் வைரமுத்துவிடம் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் ரசிகர்கள், ”அப்பாக்கள் முரண்பட்டு நின்றாலும் கூட மகன்கள் ஒன்றிணைந்து பாடல்கள் கொடுத்திருக்கின்றனர் என்று கமெண்ட் செய்ததை அடுத்து அதற்கு பதில் அளித்தார் கபிலன் வைரமுத்து.
அப்பாக்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அவர்களும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள்தான் நண்பர்கள் என்றாலே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்புதான். எங்களது தந்தை குறித்து பேசுபவர்கள் சின்ன சின்ன கண்கள் பாடலில் இருக்கும் ”உறவெல்லாம் ஒன்றாக” என்னும் வரிகளை அதற்கான பதிலாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் குசும்பாக சில ரசிகர்கள் இந்த பாடலில் இசை சிறந்ததா அல்லது வரிகள் சிறந்ததா என்று வைரமுத்துவை நோக்கி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.