தமிழ் திரை உலகில் கிராமத்து பாட்டி வேடத்திற்கு சரியான சாய்ஸ், நடிகை காந்திமதி இருப்பார். இவர் காலத்தில் தான் நடிகை மனோரமாவும் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடித்திருந்தார்.
மனோரமா பெரும்பாலான படங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், அவரது நடிப்பை விட சற்று வித்தியாசமான நடிப்பில் கலக்கியவர் காந்திமதி என்று கூறலாம். இவர் 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா குருவம்மாவாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.
வாயில் வெற்றிலையை போட்டு மென்றபடியே அடியே.. என்று ஆரம்பித்து பேசும் இவரது பேச்சு பலரையும் ரசிக்க வைக்ககூடிய வகையில் இருந்தது. பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளி வந்த இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தது.
மேலும் 80-கால கட்டங்களில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் சிவாஜியோடு முதல் மரியாதை படத்தில் இவர் நடித்த நடிப்பு இன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருப்பதோடு அனைவரையும் ரசிக்க வைத்தது என்று கூறலாம்.
இந்தப் படத்தில் இவர் பேசிய வசனங்கள் கிராமத்து மண்வாசனையை அப்படியே ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. அது மட்டுமல்லாமல் தாய்குலங்கள் இவரது நடிப்பை பார்த்து வியந்தார்கள்.
எனினும் காந்திமதிக்கு மனோரமா, அளவிற்கு தனக்கு பெயர் கிடைக்கவில்லை என்ற சோகம் கடைசி வரை இருந்தது. இவர் நடித்த முதல் படம் ஜோசப் தலியத்தின் இயக்கத்தில் வெளி வந்த “இரவும் பகலும்” என்ற படம் தான். இந்த படத்தில் அறிமுக நாயகனாக ஜெயசங்கர் நடித்திருந்தார்.
மேலும் மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் சுருளிராஜனோடு இணைந்து காமெடியில் பின்னிப் பெடல் எடுத்து இருப்பார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து நடித்த படங்களில் மெல்ல, மெல்ல இவரது மார்க்கெட் குறைய ஆரம்பித்தது.
இதனை அடுத்து சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் மை டியர் பூதம், கோலங்கள் போன்ற சீரியல்களிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.bஇதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த காந்திமதி சினிமாவில் தொடர்ந்து கவனத்தை செலுத்திய காரணத்தால் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் போய்விட்டார். எனவே தான் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்தார்.