சுவைமிகுந்த கொங்கு நாட்டு அரிசி பருப்பு சோறு.

கொங்கு தமிழ் பேசி வரும் கோவை மாவட்டத்தில் மிகவும் சிறப்பான உணவுகள் ஒன்று தான் இந்த கொங்கு நாட்டு அரிசி பருப்பு சோறு. ஒரு முறை சுவைத்தால் போதும் மீண்டும் மீண்டும் உங்களை சுவைக்கத் தூண்டும் என்று கூறும் அளவுக்கு அனைத்து விதமான சத்துக்களும்  சரிவிகிதமாக உள்ள ஒரு அற்புத உணவு. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளின் வரிசையில் இதனையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அரிசி பருப்பு சோறு செய்வதற்கான செய்முறை:

தேவையான பொருட்கள்:

1.அரிசி 

2.அவரை பருப்பு அல்லது துவரை பருப்பு

3.சின்ன வெங்காயம்

4.தக்காளி

5.பூண்டு

6.இஞ்சி

7.சீரகம்

8.சோம்பு

9.வரமிளகாய்

10.எண்ணெய்

11.உப்பு

12.பட்டை

13.மஞ்சள் பொடி

14.பச்சை மிளகாய்

அரிசி பருப்பு சோறு செய்வதற்கு அரிசி 200 கிராம் எடுத்துக்கொள்ளும்போது பருப்பு 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக துவரம் பருப்புக்கு பதிலாக அவரைபருப்பை போட்டு செய்யும் போது சுவை கூடுதலாக இருக்கும். அவரை பருப்பில் செய்ய வேண்டும் என்று நினைத்தால்  சுடுநீரில் குறைந்த பட்சம் 4 மணி நேரமாவது அவரை பருப்பை ஊற விட வேண்டும்.

இந்த சோறு செய்வதற்கான மசாலா  பொருட்களான பட்டை, இஞ்சி, பூண்டு,  சோம்பு, சிறிதளவு சீரகம், வரமிளகாய்  நான்கு இவற்றை போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக்கொண்டு  குக்கரில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்  50 மில்லி அளவு ஊற்றிக் கொள்ளுங்கள்.

எண்ணெய் காய்ந்த பிறகு 20 லிருந்து 25 சிறிய வெங்காயத்தை வெட்டாமல் அப்படியே போட்டுக் கொள்ளவும். தேவையெனில் இரண்டு மூன்று பச்சை மிளகாயை,மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பினை சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி ஒன்றை அறுத்து போடவும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலக்கி பின்பு அரிசி பருப்பு இரண்டையும் நன்கு கழுவி  இதனுடன் சேர்க்கவும். நன்றாக கிளறி பின் தேவையான அளவு நீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு  இரண்டு முதல் மூன்று விசில் வரும் வரை காத்திருக்கவும்.

விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை திறக்கும் நேரம் அளவுக்கு காத்திருக்கவும். இப்போது சூடான சுவையான கொங்குநாட்டு அரிசிபருப்பு சோறு தயார். தேவையெனில் இதில் சிறிதளவு பச்சை கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள  வாசம் தூக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam