ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா

வேலின்றி முருகனை எங்குமே காண இயலாது. ஆனால் வேலைத் தலைகீழாகப் பிடித்து நிற்கும் திருக்கோலத்தில் முருகன் அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது. இவ்வாலயம், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே உள்ள பெருநா என்ற ஊரில் அமைந்துள்ளது.

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பெருநா, சங்கனாச்சேரி, கோட்டயம், கேரள மாநிலம். இங்கு தாரகாசுரனைச் சங்கரித்த முருகப்பெருமான், வேலைத் தலைகீழாகப் பிடித்து நிற்கும் தோற்றத்தில் அருள்பாலிக்கின்றார்.

 தலவரலாறு கூறும் செய்திகள்:  உம்பிளி மற்றும் பெருநா எனும் இரு கிராமங்களில் அந்தணர்கள் வசித்து வந்தனர். பெருநா எனுமிடத்தில் வசித்த சாத்விக குணம் கொண்ட அந்தணர்கள் சிவ பக்தர்கள். உம்பிளியில் வாழந்த மாய, தந்திர வேலைகளைச் செய்யும் அந்தணர்கள் பெருநா மக்களின் மீது பொறாமை கொண்டு உம்பிளி பகுதி மக்களின் சிவன் கோவிலை இடித்து சேதப்படுத்தினர். அப்போது பெருநா ஊர் மக்கள் சிவப்பரம்பொருள் சிலையை மட்டும் பாதுகாப்பாக மீட்டனர்.

இவர்களின் பிணக்கைத் தீர்ப்பதற்காக இடமனா இல்ல நம்பூதிரி என்பவர் பழனி முருகன் கோவிலுக்குப் புனிதப்பயணம் சென்றார். அங்கு காட்சியளித்த பழனி முருகப்பெருமான், “பத்தினம்திட்டா மாவட்டத்தில் செல்லும் கொடுந்துறா ஆற்றில் கிடைக்கும் தனது சிலையை எடுத்து வழிபட்டு வந்தால், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்” என்றார்.

அதன் படி இடமனா நம்பூதிரி ஆற்றில் கிடைத்த சிலையை எடுத்துச் சென்று பெருநா கிராமத்தில் நிறுவினார். விடயம் அறிந்த உம்பிளியினர் பெருநா முருகன் கோவிலை அழிக்க முயன்றனர். இதனைக் தடுப்பதற்காக இடமனா நம்பூதிரி, அவரது நண்பரான காரணவர் என்பவருடன் உம்பிளியை நோக்கிச் சென்ற போது வழியில், உம்பிளி கிராமத்தினர் செய்த மாய, தந்திரங்களால், நெருப்புப் பந்து ஒன்று உருவாகி அது கோவிலை அழிக்கும் வேகத்துடன் வந்து கொண்டிருந்தது. இடமனா நம்பூதிரி அதனைத் தடுக்க, போது இந்த பூஜையில் காரணவர் பலியானார் இருப்பினும் பூஜையை தொடர்ந்து செய்த இடமனா நம்பூதிரி அந்தத் தீயசக்தியை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினார்.

அதன் பிறகு, உம்பிளி கிராமத்தினர் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. பிற்காலத்தில் உம்பிளி கிராமமே முற்றிலும் அழிந்து காடாக மாறிப் போய்விட்டதாக ஆலய வரலாறு சொல்கிறது.

இக்கோவிலில் நிறுவப்பட்டிருக்கும் முருகன் சிலை, முன்பொரு காலத்தில் முனிவர்கள் மற்றும் தேவர்களாலும் வணங்கப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது.

 

 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …