மிகஜம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
சென்னை நகரின் சில இடங்களை தவிர பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டு இருக்கிறது. எனவே திரும்பும் திசையெல்லாம் உதவிகள் கேட்கும் மக்களின் குரல் தான் காதுகளை கிழிக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க அரசு தேவையான மீட்பு பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறது. அதே நேரம் பொதுமக்களும் தன்னார்வ தொண்டர்களும் தங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், சின்னத்திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். சின்னத்திரை நட்சத்திரங்கள் பாலா, அறந்தாங்கி நிஷா மற்றும் திரைப்பட இயக்குனர் பார்த்திபன் இன்னும் சில பிரபலங்கள் என பாதிக்கப்பட்ட மக்களின் பகுதிகளுக்கு சென்று உணவு மற்றும் பிஸ்கட் பால் பாக்கெட் போன்ற அத்தியாவசிய தேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தன்னுடைய நிறுவனத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி சென்னை வேளச்சேரி கைவேலி பாலம் அருகே உள்ள பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் சானிட்டரி நாப்கின் நிறுவனமான Femi9 என்ற நிறுவனத்தின் சார்பாக சானிட்டரி பேடுகளை, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்ற நிவாரண பொருட்களை வழங்கி இருக்கிறார்.
இதற்காக Femi9 நிறுவனம் சார்பாக பிரத்தியேகமான வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வாகனத்தில் Femi9 நிறுவனத்தின் விளம்பர பலகை இடம்பெற்றிருக்கிறது.
மிக்ஜம் புயல் பாதிப்பு நிவாரணம் என்ற தலைப்பு தாங்கிய அந்த விளம்பரப்பதாக நிறுவனத்தின் விளம்பரமும் இடம்பெற்று இருக்கிறது. மட்டுமில்லாமல் அங்கிருந்து பெண்கள் சிலரிடம் நாப்கின்களை கொடுத்து அவர்களை கட்டாயப்படுத்தி போஸ் கொடுக்க வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் ஏழுந்திருக்கிறது.
விளம்பரமாக இருந்தாலும் மக்களுக்கு உதவுவதற்கு ஒரு நல்ல மனம் வேண்டும் என்று நயன்தாராவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிடும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் பொருட்களை கொடுத்து விட்டு செல்லாமல் பொருட்களை வாங்கியவர்கள் நிற்க வைத்து புகைப்படம் எடுப்பது மனதிற்கு நெருடலான விஷயமாக இருக்கிறது.. முகம் சுழிக்க வைக்கிறது.. மற்றபடி நயன்தாராவை விமர்சனம் செய்ய எதுவுமில்லை.
உதவி செய்பவர்கள்.. உதவி பெறுபவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடாமல் இருப்பது உதவி செய்பவர்களின் மேன்மையை குறிக்கும் என பதிவு செய்து இருக்கிறார்கள் ரசிகர்கள்.