தமிழ் சினிமாவில் நிறைய ஏற்ற இறக்கங்களை பார்த்து வந்தவர்தான் நடிகர் விஜய். அவரது சினிமா பயணம் தொடங்கியது முதலே விமர்சனங்களுக்கும் விஜய்க்கும் எப்போதுமே தொடர்பு இருந்து கொண்டுதான் இருக்கும். முதல் படத்திலேயே அதிக விமர்சனத்திற்கு உள்ளானார் விஜய்.
அதேபோல அவர் நடித்த திரைப்படங்களில் சுறா, புலி மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் தோல்வியையும் கொடுத்திருக்கின்றன. அதே சமயம் நிறைய திரைப்படங்கள் வெற்றியும் கொடுத்திருக்கின்றன. எனவே இது இரண்டையும் தொடர்ந்து பார்த்து வந்தவர்தான் நடிகர் விஜய் என்பதால் ஒரு திரைப்படம் தோல்வியடைவது என்பது அவருக்கு புதிதான விஷயம் கிடையாது.
இதுவரை 68 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஜய். அவற்றில் கிட்டத்தட்ட 30 திரைப்படங்கள் வரை தோல்வியை சந்தித்தது என்று கூறப்படுகிறது. அந்த தோல்வி படங்களிலேயே பெரும் தோல்வியை கண்ட திரைப்படம் என்றால் அது சிம்புதேவன் இயக்கிய புலி திரைப்படம்தான்.
புலி திரைப்படத்தின் தோல்வி:
ஃபேண்டஸி திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த படம் குழந்தைகளுக்கு பிடித்த திரைப்படமாக இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் இந்த திரைப்படம் எடுபடவில்லை என்றே கூற வேண்டும். தொடர்ந்து அதிக விமர்சனத்திற்கு அந்த திரைப்படம் அப்போது உள்ளானது.
அந்த திரைப்படத்தை அப்போது தயாரித்தது விஜயின் பி.ஆர்.ஓவாக இருந்த பி.டி செல்வகுமார் என்பவர்தான். இந்த நிலையில் புலி படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் செல்வகுமார். அதில் அவர் கூறும் பொழுது மக்களுக்கு நல்ல என்டர்டைன்மெண்ட்டான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதுதான் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் குறிபக்கோளாக இருந்தது.
அதனால் தான் நிறைய திரைப்படங்களை அவர்கள் கதைகளை பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்கள். நிறைய மொழிகளில் இருந்து ரீமேக் செய்தும் படங்களை உருவாக்கினார்கள். ஒரு திரைப்படம் தோல்வி அடைந்து விட்டால் அதை விஜய்யால் தாங்கிக்கொள்ளவே முடியாது.
உண்மையை கூறிய தயாரிப்பாளர்:
அடுத்த திரைப்படத்தில் எப்படியாவது வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்று நினைப்பார். புலி படத்தை தயாரிக்கும்படி அவர்தான் என்னிடம் கூறினார் ஒரு ஹீரோ பி.ஆர்.ஓவிற்கு படத்தை தயாரிக்க வாய்ப்பு கொடுப்பதெல்லாம் அதுதான் முதல் முறை.
இதனால் சினிமா துறையில் பலருக்கும் என் மீது பொறாமை இருக்கதான் செய்தது. இருந்தாலும் புலி படத்திற்கு நன்றாகவே பப்ளிசிட்டி செய்திருந்தோம். அந்த படம் நல்ல வருவாயை கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். இதற்கு நடுவில்தான் வருமான வரி சோதனை நடந்தது அதை அப்பொழுதே மற்றவர்கள் பெரிதாக பேசினாலும் நானும் விஜய்யும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனாலும் விதி வேறு மாதிரி விளையாடியது. சிம்புதேவன் இயக்கிய புலி திரைப்படம் சரியான சொதப்பலாக இருந்தது. என்ன செலவு வேணும்னாலும் செய்து கொள்ளுங்கள் என்று நான் சொல்லியும் அது ஒரு நல்ல திரைப்படமாக வந்து சேரவில்லை.
படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே இந்த திரைப்படம் வியாபாரம் ஆகாது என்று எனக்கு தெரிந்து விட்டது. அதன் பிறகு எனக்கு இரவெல்லாம் தூக்கமே இல்லாமல் போய்விட்டது. நான் தப்பு பண்ணி விட்டேன் என்று மனைவியிடம் புலம்பினேன்.
இந்த மாதிரியான கசப்பான அனுபவங்கள்தான் என்னை சினிமாவை விட்டு தள்ளி வைத்தது. என்னால் ஒரு சரியான படத்தை எடுக்க முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்று கூறி இருக்கிறார் செல்வகுமார்.