தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைக்கிறது. அவர்கள் நடிப்பதை விட்டு பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும், அந்த நடிகை போல் என்று, உதாரணமாக அவரைச் சொல்லும் அளவுக்கு சில நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறுகின்றனர்.
கவர்ச்சியை நம்பாமல், தங்களது திறமையை நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு மனதில் இடம் பிடித்தவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.
ரேவதி
அப்படிப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் நடிகை ரேவதி. இவர் 1966 ஆம் ஆண்டு கேரளா மாநிலம், கொச்சினில் பிறந்தவர். தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய மண்வாசனை என்ற படம் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரேவதி. எந்த படத்திலும் கவர்ச்சியாகவோ மிக மோசமான காட்சிகளிலோ நடித்தது கிடையாது.
மிகவும் கௌரவமான சிறப்பான நடிப்பை தேர்ந்தெடுத்து, நல்ல கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
குறிப்பாக ரேவதி நடித்த படங்களில் கை கொடுக்கும் கை, தேவர் மகன், மறுபடியும், தெய்வ வாக்கு, கிழக்கு வாசல், மெளன ராகம், ஆண்பாவம், வைதேகி காத்திருந்தாள், அவதாரம், புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பாற்றலை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.
ஏழு வயதில் பரதநாட்டியம்
சிறந்த நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் போன்ற பரிமாணங்களைக் கொண்ட நடிகை ரேவதி, ஏழு வயதிலேயே முறைப்படி பரதநாட்டியம் கலையைக் கற்றவர். 1979ம் ஆண்டில் அதை சென்னையில் அரங்கேற்றமும் செய்தவர்.
திருமணம்
கடந்த 1986 ம் ஆண்டில் புதுமுகம் படத்தில் நடித்த போது, ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பல ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை. ஒரு கட்டத்தில் இதுவே அவர்களது பிரிவுக்கு காரணமானது.
விவாகரத்து
கடந்த 2012ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், 2013ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகும் சுரேஷ் மேனன் இப்போதும் எனக்கு நல்ல நண்பர்தான் என்று ரேவதி கூறி வருகிறார்.
சிறந்த நடிகையாக மட்டுமே, டப்பிங் கலைஞராகவும் ரேவதி தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் தபுவுக்கு பின்னணி குரலில் பேசியிருந்தார். அதேபோல் மின்சார கனவு படத்தில் கஜோலுக்கும் பின்னணி குரலில் பேசியிருந்தார்.
டெஸ்ட் டியூப் குழந்தை
இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டில் பெண் குழந்தை பெற்றெடுத்தார் நடிகை ரேவதி. டெஸ்ட் டியூப்மூலம் பெண் குழந்தைக்கு தாயானவர் ரேவதி
2013ம் ஆண்டில் தனது 47 வயதில் விவாகரத்து, 2017ம் ஆண்டில் 51 வயதில் பிறந்த குழந்தை என நடிகை ரேவதிக்கு தனக்கான ஒரு அடையாளமாக தனது வாரிசை உருவாக்கி கொண்டார் நடிகை ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது.