செந்தில் கணேஷ் : சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நாட்டுப்புற பாடல்களை கணவன் மனைவி சகிதமாக சேர்ந்து பாடி பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜேஷ் ராஜலட்சுமி தம்பதி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்கள் பல பாடல்களை பாடி இருக்கின்றனர். திரைப்படங்களில் கூட பாடியிருக்கின்றனர். ஏ ஏ செல்ல மச்சான்.. செவத்த மச்சான் என்ற பாடலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர்கள்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களுடைய கடினமான முயற்சியால் இறுதிப்போட்டி வரை சென்று ரசிகர்களை கவர்ந்தனர். தற்போது திரைப்படங்களிலும் பாடல்களை பாடி வருகிறார்கள்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கூட பாடல்களை பாடியிருக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து இருளி என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா என்ற திரைப்படத்தில் ராஜலட்சுமி பாடிய ஏ சாமி.. வாயா சாமி.,. என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
தற்போது, லைசென்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் இந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது பிரபலமாக இருக்கும் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் ஒரு காலத்தில் மேடை நாடகம் தெருக்கூத்து பாடல் பாடி தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய ஆரம்பகால பயணங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட செந்தில் கணேஷ் உங்களுடைய ஆரம்பகால வாழ்க்கை எவ்வளவு கஷ்டங்கள் நிறைந்தது என்று பலருக்கும் தெரியாது.
ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் தான் 500, 1000 என கிடைக்கும் அதை வைத்துத்தான் எங்களுடைய வாழ்க்கையே நடந்து வந்தது. ஆனால் நிச்சயமாக எங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் நாங்கள் விடவில்லை.
வெஸ்டர்ன், கர்னாடிக் போன்ற இசைகளுக்கு இருக்கும் மதிப்பு நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு கிடையாது. நாட்டுப்புறப் பாடல்களை உலகமெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முயற்சியில் நாங்கள் விடாப்பிடியாக இருந்தோம்.
நம் மண்ணில் தோன்றிய இந்த கலை அழியக் கூடாது என்று நாங்கள் விரும்பினோம். எங்களுடைய வளர்ச்சிக்கு நாங்கள் ஒரு பக்கம் கஷ்டப்பட்டோம் என்றால் இந்த மண்ணில் பிறந்த நாட்டுப்புற பாடல்கள் அழிந்து விடக்கூடாது என்ற ஒரு எண்ணமும் எங்கள் மனதில் இருந்தது.
அந்த எண்ணம்தான் எங்களை உயர்த்தியது என்று பேசியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர் ஒருமுறை ஒரு கச்சேரியில் பாடுவதற்காக அழைத்திருந்தார்கள் அப்போது நான் என் மனைவி உள்பட 5 பாடகர்கள் அந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தோம்.
அப்போது உடை மாற்றுவதற்கு ஒரு அறை கிடைக்குமா..? என்று அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அவரிடம் கேட்டோம். ஆனால், அவர்களோ சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் திண்ணையை காட்டினார்கள். வேறு வழியில்லாமல் எங்களிடம் இருந்த புடவையை வைத்து ஒரு சின்ன அறை போல் செய்து அதில் நின்று கொண்டுதான் என் மனைவி உட்பட அனைவரும் உடை மாறினார்கள்.
அது கொடுமையான விஷயம். அப்போது எனக்கு மனம் வலித்தது. அப்படியான வேதனைகளைக் கடந்து என்னுடைய எங்களுடைய விடா முயற்சியினாலும் ரசிகர்களின் ஆதரவினாலும் தற்பொழுது நல்ல நிலையில் இருக்கிறோம். ரசிகர்களுக்கு நன்றி என்று பேசியிருக்கிறார் செந்தில் கணேஷ்.