நடிகை சுஜாதா பிறப்பு முதல் இறப்பு வரை.. பலரும் அறியாத ரகசியம்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை சுஜாதா. அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற இளையராஜாவின் பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

சுஜாதா

சுஜாதாவின் பூர்வீகம் கேரளா என்றாலும், வளர்ந்தது படித்தது எல்லாம் இலங்கையில்தான். அதற்கு காரணம், இலங்கை கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரியில் சுஜாதாவின் தந்தை பேராசிரியராக இருந்தார்.

கடந்த 1952ம் ஆண்டில், டிசம்பர் 10ல் பிறந்த சுஜாதா, தனது 15 வயது வரை இலங்கையில் வாழ்ந்தவர். அதன்பிறகு அவரது தந்தை பணஓய்வு பெற்ற நிலையில், மீண்டும் கேரளாவுக்கு திரும்பி வந்தனர்.

தையல் பயிற்சி

எர்ணாகுளம் பகுதியில் குடும்பத்துடன் குடியேறினர். சுஜாதா, வீட்டில் இருந்தபடியே தையல் பயிற்சி பெற்றார்.

சுஜாதாவின் அம்மாவுக்கு, தன் மகளை நடிகையாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை தன் கணவரிடம் சொல்ல, அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும், மனைவியின் வற்புறுத்தலால் ஓகே சொன்னார்.

பெற்றோர் வற்புறுத்தலால்…

அதன்பிறகு பெற்றோர் வற்புறுத்தலால், மலையாள சினிமாவில் நடிக்க துவங்கினார் சுஜாதா. அம்மு, காட்டுப்பூக்கள் போன்ற படங்களில் நடித்தார்.

1971ம் ஆண்டில் தபஸ்வீணா என்ற மலையாள படத்தில் காதலிக்க பயப்படும் பெண்ணாக அந்த கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் சுஜாதா.

தொடர்ந்து 1973ம் ஆண்டில் சுழி என்ற படத்தில், நடிகை சாவித்திரி மகளாக நடித்த சுஜாதா, 3 ஆண்டுகளில் மலையாளத்தில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார்.

ஆனால் எல்லா படங்களிலும் 2ம் கட்ட கதாநாயகியாக, குணச்சித்திர வேடங்களில் நடித்ததால் பெரிய அளவில் அவரால் வரவேற்பை பெறவில்லை.

அவள் ஒரு தொடர்கதை

இதன்பிறகு 1974ம் ஆண்டில் கே பாலசந்தர் இயக்கத்தில், அவள் ஒரு தொடர்கதை படத்தில் நாயகியாக அறிமுகமான சுஜாதா, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார்.

மலையாளம், சிங்களம் மட்டுமே பேசத்தெரிந்த சுஜாதா, தமிழ் பத்திரிகைகளை வாசித்து, வாசித்து நன்றாக தமிழ் மொழி பேசக் கற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தமிழ், மலையாளம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுஜாதா. ஒரு கட்டத்துக்கு பிறகு அம்மா வேடங்களில் சுஜாதா நடித்தார்.

கடைசியாக நடித்த படம்

செந்தமிழ்பாட்டு படத்தில் பிரபுவுக்கும், பாபா படத்தில் ரஜினிக்கும், வரலாறு, அட்டகாசம் போன்ற படங்களில் அஜித்குமாருக்கும் அம்மாவாக சுஜாதா நடித்திருந்தார். சுஜாதா தமிழில் கடைசியாக நடித்த படம் வரலாறு தான்.

கடந்த 1977ம் ஆண்டில் ஜெய்கர் என்பவரை சுஜாதா திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கின்றனர். மகள். இருதய நோய் சிறப்பு டாக்டராக இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டில் ஏப்ரல் 6ம் தேதி நடிகை சுஜாதா உடல் நலம் பாதித்த நிலையில் இறந்தார்.

300க்கும் மேற்பட்ட படங்களில்…

நடிகை சுஜாதாவை பொருத்த வரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த முன்னணி கதாநாயகியாக இருந்தும், பத்திரிகைகள் மற்றும் டிவிகளில் அதிகம் நேர்காணல் தரமாட்டார். செய்தியாளர்களை சந்தித்ததும் இல்லை. சினிமா விழாக்களிலும் கூட அதிகமாக பங்கேற்க மாட்டார்.

கடைசியாக அவரை பலரும் பார்த்தது, நடிகர் திலகம் சிவாஜி மறைவின் போது அங்கு வந்தவர், நடிகை மனோரமாவுடன் இருந்திருக்கிறார். அதன்பிறகு அவரது மறைவு செய்திதான் தெரிய வந்திருக்கிறது.

பிறப்பு முதல் இறப்பு வரை..

சுஜாதா முகத்தில் எப்போதும் ஒரு சோகத்துடன்தான் காணப்படுவார். குடும்ப வாழ்க்கையில் அவர் நிம்மதி இழந்திருந்தாரா, என்பதும் தெரியவில்லை.

இப்படி நடிகை சுஜாதாவின் பிறப்பு முதல் இறப்பு வரை, பலரும் அறியாத ரகசியமாக அவர் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam