திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர்

தலத்தின் வரலாறும் சிறப்புகளும்:- 

சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.

திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமணஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 

மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தனது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவர் என்பது அனுபவ உண்மையாகும்.

திருமண பிரார்த்தனை விபரம்:-

திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் இனிதே கைகூடும். 

திருமணம் முடிந்தவுடன், ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை தம்பதி சமேதராய் வந்து ஆலயத்தில் செலுத்தி பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்ள வேண்டும். 

கோவில் அமைப்பு:-

 

கிழக்கு நோக்கியிருக்கும் இவ்வாலயம் இராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் கொடிமர கணபதி காட்சி தருகிறார். அடுத்து முறையே கொடிமரம், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பிறகு 3 நிலை 2வது கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் கருவறையில் கிழக்கு நோக்கி இத்தலத்து இறைவன் உத்வாகநாதர் அழகுற அருட்காட்சி தருகிறார். கருவறையின் முன் மண்டபத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு இத்தலத்து இறைவி கோகிலாம்பாள் அமர்ந்த நிலையில் திருமணப் பெண் போன்றே அருட்காட்சி தருகிறாள்.

கருவறையின் இடது புறம் நிருத்த மண்டபத்தில் இவ்வாலயத்தின் உற்சவ மூர்த்தியான கல்யாண சுந்தரர் அம்பிகை கோகிலாம்பாளுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். நடராஜர், சுப்பிரமணியர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, இராகு பகவான், துர்க்கை, மகாவிஷ்னு ஆகியோர் சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன. 

இறைவனின் திருமணத்திற்கு மாலைகளாக மாறி வந்த சப்த சாகரங்களும் (ஏழு கடல்களும்) இங்கேயே தங்கித் தீர்த்தமானதாகச் சொல்லப்படுகிறது. சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப்படும் இந்த தீர்த்தம் கோயிலின் பக்கத்தில் உள்ளது. சோழ மன்னன் கண்டராதித்யனின் மனைவியான செம்பியன் மகாதேவியால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது என்று இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.

மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கி.மி. தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …