தற்சமயம் திரையரங்கில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்து வருகிறது கோட் திரைப்படம். விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் ஒரு பாடலை ஏ.ஐ முறை மூலம் பவதாரணியை பாட வைத்துள்ளனர். அந்த அனுபவம் குறித்து வெங்கட் பிரபு பேசும்பொழுது நிறைய முக்கியமான விஷயங்களை பேசி இருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது நான் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் பொழுது அதில் பவதாரணி பாட வேண்டும் என்று பவதாரணியிடம் கூறியிருந்தேன். அவளும் என்னிடம் நீதான் அண்ணா எப்போதும் எனக்கு வாய்ப்பு கொடுக்கிற யுவன் வாய்ப்பே கொடுக்க மாட்டார் என்று கூறினாள்.
அவள இழந்துட்டோம்
ஏனெனில் எனது படங்களில் எல்லாம் சின்ன வாய்ப்பாவது நான் பவதாரணிக்கு கொடுத்து விடுவேன். அப்படி இருக்கும் பொழுது பவதாரணிக்கு திரைப்படத்தில் பாட வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருந்தது.
ஆனால் சரியாக அந்தப் படத்தில் இசை அமைப்பதற்காக பெங்களூருக்கு நாங்கள் சென்ற அந்த நாளில்தான் பவதாரணி இறந்து போனாள். அந்த செய்தி எனக்கு வந்தவுடன் என்ன செய்வதென்றே தெரியவில்லை அப்பொழுதுதான் ஒரு இரண்டு மூன்று பாடல்களுக்கான இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்திருந்தார்.
நான் யுவனிடம் சென்று இந்த விஷயத்தை கூறிய பொழுது முழுவதுமாக உடைந்து போய்விட்டான் யுவன். அன்று ஜனவரி 26 என்பதால் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. ஜனவரி 26 என்பதால் அரசு சார்பான விஷயங்களுக்கு எல்லாம் அன்று விடுமுறை. ஆனால் பவதாரணி இறந்தது வெளிநாட்டில் என்பதால் அவளை இந்தியாவிற்கு அழைத்து வருவது சிரமமான விஷயமாக மாறிவிட்டது.
பவதாரணியின் கடைசி ஆசை
அப்பொழுதுதான் நாங்கள் இலங்கையில் அவரை சேர்த்திருந்தோம். அவளே ரெண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து விடுகிறேன் என்று கூறினாள். சரி என்று நாங்களும் அதற்கு ஏற்பாடு செய்தோம். பிறகு அன்று இளையராஜாவின் இசை கச்சேரி இலங்கையில் இருந்தது.
அதை முடித்துவிட்டு அப்பாவை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறினாள் பவதாரணி. அதனால் அவள் அங்கேயே சிகிச்சை பெறட்டும் என்று நாங்களும் விட்டு விட்டோம். அதற்குப் பிறகு அவளை இந்தியா அழைத்து வரலாம் என்று இருந்தோம்.
ஆனால் அதற்குள்ளாகவே பவதாரணி இறந்துவிட்டாள். முதல் நாள் பேசி நன்றாக இருந்துவிட்டு மறுநாள் அவள் இறந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. முக்கியமாக எங்களை விட வயதில் குறைந்தவள் பவதாரணி.
எமோஷனல் ஆன வெங்கட் பிரபு
அதற்குப் பிறகுதான் ஏ.ஆர் ரகுமான் ஏற்கனவே இறந்த ஒருவரின் குரலை பாடலில் வைத்திருக்கிறார் என்கிற செய்தி தெரிந்தது. அதை நான் யுவன் சங்கர் ராஜாவிடம் கூறினேன். அதேபோல பவதாரணியின் குரலை நாம் கோட் படத்தில் வைப்போம் என்று கூறினேன்.
அது யுவன் சங்கர் ராஜாவிற்கும் பிடித்திருந்தது. பிறகு ஏ.ஆர் ரகுமானை தொடர்பு கொண்டு எப்படி அதை சாத்தியப்படுத்தினார் என்று கேட்டோம் அவரும் எங்களுக்கு அனைத்து தகவல்களையும் கொடுத்தார். அதன் அடிப்படையில்தான் சின்ன சின்ன கண்கள் என்கிற அந்த பாடல் உருவானது.
அந்த பாடலை கேட்ட பொழுது யுவன் சங்கர் ராஜாவும் நானும் கண்ணீர் விட்டு அழ துவங்கி விட்டோம். அந்த அளவிற்கு பவதாரணியின் குரல் அச்சு அசலாக அந்த பாடலில் வெளிவந்திருந்தது என்று அந்த நிகழ்வுகளை பகிர்ந்து இருக்கிறார் வெங்கட் பிரபு. மேலும் அந்த பாடலை பவதாரணியுடன் சேர்ந்து விஜய் பாடியிருப்பது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் வெங்கட் பிரபு.