தமிழ் சினிமாவில் துணை நடிகராக நடித்து பின் நாயகனாக மாறியவர் நடிகர் விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று படம்தான் அவருக்கு நடிகர் என்ற அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், பீட்சா போன்ற படங்கள் அவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது.
வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் கேரக்டர் பெயரே இல்லாமல், பத்தோடு பதினொன்றாக வந்து போகும் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதிக்கு, சுமார் மூஞ்சி குமார் கேரக்டரில் நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.
தொடர்ந்து தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, கருப்பன், விக்ரம் வேதா படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் வில்லன் கேரக்டருக்கு மாறினார். மாஸ்டர், விக்ரம், பேட்ட படங்களில் ரஜினி, கமல், விஜய் போன்றவர்களுக்கு வில்லனாக நடித்தும் ரசிகர்கள் மத்தியில் கைதட்டலை பெற்றார்.
இதைத்தொடர்ந்து அட்லி இயக்கத்தில் பாலிவுட் படமான ஜவான் படத்திலும் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்தார் விஜய்சேதுபதி. ஆனால் தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளின்றி தற்போது இருந்து வருகிறார். இந்நிலையில் மேரி கிறிஸ்துமஸ் என்ற தனது இந்தி படத்தை மிக ஆவலாக விஜய் சேதுபதி எதிர்பார்த்து இருக்கிறார். அந்த படம் வெற்றி பெற்றால் பாலிவுட் பக்கமே ஒதுங்கி விடலாம், என்றும் திட்டமிட்டுள்ளார்.
காரணம் இந்தியில் தமிழில் கிடைப்பதை விட சம்பளம் அதிகம் என நினைக்கிறார். ஆனால் 1980களில் இந்தியில் நடிக்கப் போய், பின் அங்கு மற்ற போட்டி நடிகர்களின் டார்ச்சரை தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழ் சினிமாவுக்கே திரும்பி ஓடி வந்தவர்தான் உலகநாயகன் கமல்ஹாசன். அவரது வரலாறும் விஜய் சேதுபதிக்கு இப்போது தெரிந்திருப்பது முக்கியம்.