கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி : பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு ?


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்டு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

ஐரோப்பிய சந்தையில் Brent கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5 சதவிகிதம் குறைந்து 59 டாலராக இருந்தது. சமீப ஆண்டுகளில் கச்சா எண்ணெய் ஒரே நாளில் இவ்வளவு அதிக விலை வீழ்ச்சியை சந்தித்திருப்பது இதுவே முதல் முறை. கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ள அதே வேளையில் அதை பயன்படுத்தும் அளவுக்கு பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இருக்காது என வெளியான தகவல்களே விலை வீழ்ச்சிக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5% வீழ்ச்சியடைந்ததால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து அதன் விலை வீழ்ச்சியை கட்டுக்குள் வைப்பது குறித்து ஓபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகள் டிசம்பர் 6-ம் தேதி முடிவு செய்ய உள்ளது. அதுவரை விலை வீழ்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை ‌ஒரு மாதத்திற்கும் மேலாக இறங்கு முகத்திலேயே காணப்படுகிறது.

சென்னையில் கடந்த 39 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 7 ரூபாய் 98 காசுகளும், டீசல் லிட்டருக்கு 5 ரூபாய் 91 காசுகளும் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் விலை சரிவின் எதிரொலி காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி தொடர்தால் சர்வதேச சந்தையில் பொருளாதார வளர்ச்சி குறைத்து, பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைய வாய்ப்பு அதிகம் என தகவல் தெரிவிக்கின்றன.