இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இசையமைத்துள்ள திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். 'ஜோ' படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. வாருங்கள், ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
படம் ஆரம்பிக்கும்போது ஐந்து வயதில் கதாநாயகன் ரியோ தனது தாயை பிரிகிறார். பன்னிரண்டு வயதில் தந்தையை இழக்கிறார். சிறுவயதில் இருந்தே தனிமையில் வளர்ந்து வரும் ரியோ, ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இறுதி வரை காதலோடு வாழ முடியாது என்ற எண்ணத்திற்கு வருகிறார்.
காலங்கள் உருண்டோட, கதாநாயகி கோபிகாவை (மனு) ரியோ சந்திக்கிறார். இருவரும் பேசப்பழகிய சில நாட்களிலேயே கோபிகாவிற்கு ரியோ மீது காதல் வருகிறது. ஆனால் ரியோ அந்த காதலை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்.
ஒரு கட்டத்தில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்து நெருக்கமாக பழகுகிறார்கள். இதன் விளைவாக கோபிகா கர்ப்பமாகிறார். இந்த குழந்தை தனக்கு வேண்டும் என்று கோபிகா சொல்ல, ரியோவோ குழந்தையை கலைத்து விடலாம் என்று கூறுகிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்:
கதாநாயகன் ரியோ மற்றும் கதாநாயகி கோபிகா இருவருடைய நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. காதலர்களுக்கு இடையே வரும் சிறுசிறு வாக்குவாதங்கள், அழகான ரொமான்ஸ் காட்சிகள், அதேபோல் பிரேக் அப்பிற்கு பிறகு இருவரும் உடைந்து போகும் காட்சிகளில் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளின் நடிப்பும் படத்திற்கு தேவையான பங்களிப்பை அளித்துள்ளது.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எடுத்துக்கொண்ட கதைக்களம் இன்றைய இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதுவே இப்படத்தின் மிக முக்கியமான பலம்.
படத்தின் முதல் பாதி திரைக்கதை சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக படத்தின் கடைசி 40 நிமிடங்களில் வரும் எமோஷனல் காட்சிகள் நம்மை கண்ணீர் விட வைக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட்.
ஸ்வீட் ஹார்ட் படத்தின் ட்ரைலரை பார்த்த பலரும் இது 'டாடா', 'பேச்சிலர்' போன்ற படங்களை போல் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இப்படத்தின் கடைசி 40 நிமிடங்கள் அமைந்துள்ளது.
படத்தின் மாபெரும் பலம் என்றால் அது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைதான். காதல் என்று வந்துவிட்டால் யுவனின் இசையை மிஞ்ச ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பின்னணி இசையும் பாடல்களும் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
காதல் காட்சிகள், சோகமான காட்சிகள் என அனைத்திலும் தனது இசையால் மாயாஜாலம் செய்துள்ளார். ரசிகர்கள் சொல்வது போல் யுவன் ஷங்கர் ராஜா என்றும் நம்பர் 1 தான். ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் படத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன.
மொத்தத்தில், ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் உறவுச்சிக்கல்களை யதார்த்தமாக பிரதிபலிக்கும் ஒரு அழகான காதல் காவியம். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது
0 கருத்துகள்