கட்டாயத்தில் நிறுவனங்கள்... விரைவில் வீட்டு உபயோகப் பொருட்களின் விலையேற்றம்!


ரூபாய் வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலையேற்றம் விழாக்காலத்தை முன்னிட்டு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்க வரி அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்ற காரணங்களால் வீட்டு உபயோகப் பொருட்களின் தயாரிப்பு செலவு அதிகரித்து லாபம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இழப்பை சரிசெய்ய வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே பெரும்பாலான நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது பானாசோனிக் நிறுவனம் தயாரிப்புகளின் விலையை 7 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் இந்தியப்பிரிவு சிஇஓ மணிஷ், இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக நிறுவன தயாரிப்புகளின் செலவீனம் அதிகரித்துள்ளது. இதனை சரிகட்ட விலையை உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

விலை உயர்வு திட்டம் குறித்து பேசியுள்ள ஹயர் நிறுவன இந்திய தலைவர் எரிக், இந்த விலை உயர்வை தவிர்க்க முடியாத நிலையில் கையில் எடுத்துள்ளோம். கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட விழாக்காலங்களில் இந்தியர்கள் அதிக அளவில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குகிறார்கள். அதனை கருத்தில் கொண்டே விலையேற்றம் கொண்டுவரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.