மீண்டும் களமிறங்கும் ஜாவா பைக்குகள் !


புகழ்பெற்ற ஜாவா மோட்டார் பைக்குகள் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்க தயாராக உள்ளது.

ரஜினி,கமல்,போன்ற நடிகர்கள் அனைவரும் பழைய திரைப்படங்களில் ஒட்டிய பைக்தான் ஜாவா. கரடு முரடான பாதைகளில் ரவுடிகள் விரட்ட ஹீரோ இந்த பைக்கைதான் ஓட்டிச் செல்வார். செக் குடியரசு நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட இந்த பைக்குகள், வித்யாசமான சைலன்சர், இஞ்சின் சத்தம் என்று இளைஞர்களிடத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. பின் 1996 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜாவா பைக்குகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் செக் குடியரசு நாட்டின் மோட்டார் சைக்கிள் பிராண்டான ஜாவாவை ஆசியாவில் தயாரித்து விற்பதற்கான உரிமத்தை மகிந்திரா நிறுவனம் சமீபத்தில் பெற்றது. இதனையடுத்து மகேந்திரா நிறுவனத்தின் துணை நிறுவனமான கிளாசிக் லெஜன்ட்ஸ் ஜாவா பைக்குகளை தயாரித்து வந்தது. 350 சிசி திறனுள்ள ஜாவா பைக்குகள் மத்திய பிரதேசத்தின் பிதம்பூரில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகிந்திரா அண்டு மகேந்திரா நிறுவனம் ஜாவா பைக்குகளை இந்தியாவில் நாளை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் முதல் வெளியீடாக ஜாவா 350 OHC 4-Stroke மற்றும் ஜாவா 660 வின்டேஜ் பைக்குகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜாவா பைக்குகள் இந்திய சந்தையில் களமிறங்க உள்ளதால் அதன் மீது பல இளைஞர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இப்போதும் பெரு நகரங்களில் பலர் ஜாவா பைக்கை புத்தம் புதிதாக பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.