“அடுத்த நாளே விலை ஏறுகிறது” - பெட்ரோல் விலையை குறைத்து என்னதான் பயன்..?

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைப்பதுபோல குறைத்துவிட்டு மறுநாளே ஏற்றுவதாக மக்கள் சாடியுள்ளனர்.


பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் அதிகம் சிரமப்படும் நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ஒன்றரை ரூபாய் குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 4-ஆம் தேதி அறிவித்தார். இதேபோல பெட்ரோல், டீசல் மீதான விலை மேலும் குறையும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஒரு ரூபாயை விட்டுத்தர முன்வந்திருப்பதாகவும் கூறினார். மாநில அரசுகளும் இதே அளவுக்கு விலையைக் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் அருண் ஜெட்லி. எனவே பாரதிய ஜனதா ஆளும் மகாராஷ்டிரா, குஜராத், அசாம், சத்தீஸ்கர், திரிபுரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களில் கூடுதலாக இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக 5 ரூபாய் குறைந்தது.


பெட்ரோல் விலை இவ்வாறு குறைக்கப்படுவதற்கு முன்னதாக அதாவது அக்டோபர் 4-ஆம் தேதி காலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87 ரூபாய் 33 காசுகளாக இருந்தது. மும்பையிலோ 91 ரூபாய் 34 காசுகளாக இருந்தன. பெட்ரோல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் அதாவது அக்டோபர் 5-ஆம் தேதி சென்னையில் பெட்ரோல் விலை 84 ரூபாய் 70 காசுகளாக இருந்தது. அதாவது 2 ரூபாய் 63 காசுகள் குறைந்திருந்தது. மும்பையிலோ அக்டோபர் 5-ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 97 காசுகளுக்கு விற்பனையாகின. அதவாது 4 ரூபாய் 37 காசுகள் குறைக்கப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நேற்றைவிட இன்று 19 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 89 காசுகளுக்கு விற்பனையாகுகிறது. மும்பையிலும் நேற்றைவிட இன்று 45 காசுகள் அதிகமாக 87 ரூபாய் 15 காசுகளுக்கு விற்பனையாகிறது.


டீசல் விலை குறைக்கப்பட்ட பின் நேற்று சென்னையில் ஒரு லிட்டர் 77 ரூபாய் 11 காசுகளுக்கு விற்பனையாகின. இந்நிலையில் இன்று மீண்டும் 0.31 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனையாகின்றன. இதனால் மத்திய அரசு விலையை குறைப்பதுபோல குறைத்துவிட்டு மறுநாளே ஏற்றுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். விலையை குறைத்துவிட்டு மறுநாளே ஏற்றுவது தங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.