இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இந்த சோகமான செய்தி தமிழ் திரையுலகையும் ரசிகர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும், இந்த துயரமான தருணத்திலும் சில நடிகர்கள் இரங்கல் தெரிவிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் கூட ஒரு இரங்கல் செய்தியை பதிவிடாதது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாரதிராஜா, கிராமப்புற மக்களையும் புதுமுக நடிகர்களையும் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர். மதுரையில் வளையல் கடை நடத்தி வந்த பாண்டியனை கதாநாயகனாக மாற்றியவர் அவர்.
ஆனால், பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா திறமை இருந்தும் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனது அவரது மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. "அப்பாவை போல நீங்கள் ஜெயிக்கவில்லையே ஏன்?" என்ற கேள்வி அவரை தொடர்ந்து துரத்தியதால் எட்டு வருடங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.
இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் சினிமாவில் நுழைந்த மனோஜ், தந்தையின் விருப்பத்திற்காக நடிகரானார். சில படங்கள் வெற்றி பெற்றாலும், அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.
மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்ததும் சூர்யா, கார்த்தி, விஜய், எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களும், பாக்கியராஜ், பாண்டியராஜ், கே.ஆர்.கே. செல்வமணி, பி. வாசு, மணிரத்னம், சுந்தர்ராஜன் போன்ற இயக்குனர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். ஆனால், நடிகர் சிம்பு, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ரஜினிகாந்த் போன்ற ஒரு சிலர் நேரில் வந்து இரங்கல் தெரிவிக்கவில்லை, சமூக வலைதளங்களிலும் எந்த பதிவும் இடவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, நடிகர் தனுஷ், பாரதிராஜாவுடன் "திருச்சிற்றம்பலம்" படத்தில் நடித்திருந்தார். பாரதிராஜா மீது அன்பும் மரியாதையும் கொண்ட அவர், நேரில் வர முடியாவிட்டாலும் ட்விட்டரில் ஒரு இரங்கல் செய்தி கூட பதிவிடாதது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேபோல, விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். பாரதிராஜாவுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். அவருக்காகவாவது நேரில் சென்றிருக்கலாம் அல்லது சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பாரதிராஜாவின் படங்கள் பெரிய திருப்புமுனையை கொடுத்தன. இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்பட்டாலும், இந்த துயரமான நேரத்தில் அவர் நேரில் வராதது அல்லது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவிக்காதது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அவர் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ஒரு இரங்கல் செய்தியை பதிவிட்டிருக்கலாம் என்பது பலரது கருத்தாக உள்ளது. இந்த பிரபல நடிகர்களின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது.