வண்டி வண்டியா வந்துச்சே பிராப்ளம்சு.. அரசியல்வாதிகளிடம் சிக்கிய நடிகை.. ஆனானப்பட்ட ஜெயலலிதா.. ரஜினியே..

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா மொழி வெறியர்கள் மற்றும் இன வெறியர்களிடம் சிக்கி கொண்டுவிட்டாரோ என்ற கவலை ஏற்படுவதாக மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார். 

Advertisement

ராஷ்மிகா அடுத்தடுத்து கன்னட படங்களில் நடிக்க உள்ள நிலையில், இந்த பிரச்சனைக்கு உடனடியாக சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வலைய பேச்சு அந்தணன் தன்னுடைய யூடியூப் சேனலில் இதுகுறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

அதில் அவர் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பேசியது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்தும், கர்நாடகாவில் நிலவும் மொழிப்பற்று குறித்தும் விரிவாக அலசியுள்ளார். 

அந்தணன் பேசியதாவது: "கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் ராஷ்மிகா. அங்கேதான் படித்து, அங்கேயே சினிமாவில் அறிமுகமானார். இதற்கு பிறகு தெலுங்கில் மிகப்பெரிய நடிகையாக மாறினார். கீதா கோவிந்தம் படத்துக்கு பிறகு நிறைய படங்கள் ஹிட்டாயின. புஷ்பா படத்துக்கு பிறகு பல மொழிகளில், பல கோடி சம்பளங்களில் இன்று நடித்து வருகிறார். 

அந்த வகையில் செல்வச்செழிப்பில் உள்ளார். இப்படிப்பட்ட ராஷ்மிகா, மொழி வெறியர்கள், இன வெறியர்களிடம் சிக்கி கொண்டுவிட்டாரோ என்ற கவலை ஏற்படுகிறது. காரணம், சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய ராஷ்மிகா, "என்னுடைய ஊர் ஆந்திரா" என்பதுபோல பேசியதாக கூறி விவகாரம் வெடித்துள்ளது. பெங்களூர் படவிழாவில், 'கர்நாடகாவா? அது எங்கே இருக்கு? பெங்களூரா அது எங்கே இருக்கு' என்று ராஷ்மிகா கேட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

 தான் அவ்வாறு பேசவில்லை என்று ராஷ்மிகா கூறினாலும், கர்நாடகாவில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. வழக்கமாக பிரபலங்கள், தங்கள் பட புரமோஷனுக்காக, அந்தந்த மாநில ரசிகர்களிடம், 'இதுதான் நான் பிறந்த மண், இதுதான் என்னுடைய மொழி' என்றெல்லாம் சொல்வார்கள். இதன்மூலம் ரசிகர்களையும் கவர்ந்திழுப்பார்கள். 

இப்படித்தான் ஒருமுறை நடிகர் கார்த்தி, "தெலுங்கு ரசிகர்களை தான் பிடிக்கும்" என்று சொல்லிவிடவும், 'அப்படின்னா தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் யார்?' என்று கேள்வி எழுந்து, மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. 

அதேபோல, பொன்னியின் செல்வம் பட புரமோஷனுக்கு நடிகை சுகாசினி பேசியபோது, "இது உங்க ஊரில் எடுக்கப்பட்ட படம்" என்று சொல்லி, அதுவும் சலசலப்பை தந்தது, முழுக்க முழுக்க பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து இப்படி பேசிவிடுகிறார்களே தவிர, நாம் இப்படி பேசுவதால், தமிழ்நாட்டில் இதெல்லாம் என்னவாக பிரதிபலிக்கும் என்று யோசிப்பதில்லை. 

ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்கள் இவர்களை எல்லாம் பொறுத்து கொள்வது போல, மற்ற மாநிலங்களில் இவர்களை அங்குள்ள ரசிகர்கள் பொறுத்து கொள்வதில்லை. கர்நாடகாவில் உள்ளவர்கள் மொழிப்பற்று, மொழி வெறியர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். 

இப்போது ராஷ்மிகாவுக்கு எதிராக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. அங்குள்ள காங்கிரஸ் எம்எல்ஏ, ராஷ்மிகா மன்னிப்பு கேட்கணும் என்று சொல்லி கொண்டிருக்கிறார். சினிமா விவகாரம் எப்படி அரசியல் ஆனது என்று தெரியவில்லை. 

ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது, 3 எலும்பு முறிவு ஏற்பட்டாலும், வீல் சேரிலும் நொண்டி கொண்டே வந்து ஒரு படவிழாவில் பங்கேற்றவர் ராஷ்மிகா. தொழில் மீது இவ்வளவு அக்கறை உள்ளவர், அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 

ஜெயலலிதா அம்மாவே கர்நாடகாவில் பிரச்சனையை சந்தித்தார். 'காவிரி எங்கள் உரிமை, நாங்கள் ஏன் உங்களிடம் தண்ணீருக்கு கையேந்தணும்' என்று சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பெருமளவு காரணமாக இருந்தார். நீதிமன்றமும் சென்றார். 

இன்றைக்கு ஏதோ ஒரு வகையில் நமக்கு தண்ணீரும் கிடைத்து கொண்டுமிருக்கிறது. ஜெயலலிதா நடிகையாக இருந்தபோதே கன்னடத்துக்கு ஆதரவாக பேச சொல்லியும்கூட தமிழ் வாழ்க என்றார். 

ஆனானப்பட்ட ஜெயலலிதாவையே ஆட்டிப்படைத்த கர்நாடகாவில், ராஷ்மிகா என்ற சாதாரண நடிகையால் என்ன செய்ய முடியும்? பல வருடங்களுக்கு முன்பு, காவிரி பிரச்சனையின்போது, அவர்களை சத்யராஜ் தவறாக பேசியதால், பாகுபலி படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய முடியாது, சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். 'என் உணர்வைதானே நான் வெளிப்படுத்தினேன்' என்று சத்யராஜ் சொல்லியும்கூட, மன்னிப்பு கேட்க அழுத்தம் தரப்பட்டது. 

இறுதியில், வேறுவழியின்றி சத்யராஜ் மன்னிப்பு கேட்ட பிறகுதான் பாகுபலி படத்தை ரிலீஸ் செய்ய விட்டார்கள். இத்தனைக்கும் நேரடி கன்னட படம் அது கிடையாது. இதே காவிரி பிரச்சனையில் ரஜினியும் ஒருமுறை உணர்ச்சி வசப்பட்டு பேசி, ரஜினி படங்களையும் அங்கே வெளியிடாமல் செய்தனர். 


கன்னடர்களின் மொழிப்பற்று சரியென்றாலும், எல்லா இடத்திலும் அதை முரட்டுத்தனமாக அப்ளை செய்வதுதான் கஷ்டமா இருக்கு. ராஷ்மிகா விவகாரம் எதை நோக்கி திசை திருப்பப்படுகிறது என்று தெரியவில்லை. 

இதுக்கு இப்பவே ராஷ்மிகா, தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டால், இந்த பிரச்சனை இப்போதே தீர்ந்துவிடும்," என்று அந்தணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் அந்தணன் ராஷ்மிகா மந்தனா குறித்து பேசிய இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ராஷ்மிகா இந்த சர்ச்சை குறித்து என்ன விளக்கம் அளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்